கோவை மேயர் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் நேரு, முத்துசாமியிடம், பணிக்குழு தலைவரான கவுன்சிலர் சாந்தி முருகன், மேயர் பதவி தரப்படாதது பற்றி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அமைச்சர், பிற கவுன்சிலர்களின் சமாதானத்தை ஏற்காத அவர் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் தேர்தலில், கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் 20 பேர் ஓட்டளித்து, தலைமைக்கு ‘ஷாக்’ கொடுத்தனர். இந்தநிலை, கோவை மேயர் தேர்தலில் ஏற்படாமல் இருக்க அமைச்சர்கள் உஷார் ஆகினர்.

கோவை மேயர் தேர்தல் இன்று (ஆகஸ்ட் 06) நடைபெறுவதால், தி.மு.க., கவுன்சிலர்களுடன் அமைச்சர்கள் முத்துச்சாமி, கே.என்.நேரு ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் நேரு, முத்துசாமியிடம், பணிக்குழு தலைவரான கவுன்சிலர் சாந்தி முருகன், மேயர் பதவி தரப்படாதது பற்றி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

‘‘50 ஆண்டு காலமாக நாங்கள் கட்சியில் இருக்கிறோம். ஆனால் எங்களை கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டீர்கள். கட்சிக்காக நாங்கள் கோடிக்கணக்காக பணம் செலவிட்டுள்ளோம். எங்களை மேயராக தேர்ந்தெடுக்காமல், புதியவர்களை மேயராக தேர்தெடுத்துள்ளீர்கள்’’ என சாந்தி முருகன் பேசினார்.

பின்னர் உட்காருங்கள்! உட்காருங்கள்! என இருமுறை அமைச்சர் நேரு தெரிவித்தார். நாங்கள் எங்கள் உரிமையை தான் கேட்கிறோம் என சாந்திமுருகன் மீண்டும் எதிர்த்து பேசினார். கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என கவுன்சிலர்களிடம் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே அழுதபடி கவுன்சிலர் சாந்தி முருகன் வெளியேறினார். அமைச்சர், பிற கவுன்சிலர்களின் சமாதானத்தை ஏற்காத அவர் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று கோவை மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதும், மண்டல தலைவர் மீனா லோகு அழுதபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது

ஆக மொத்தத்தில் மேயர் தேர்வின் மூலம், தி.மு.க. கவுன்சிலர்கள் தலைமைக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் எச்சரிக்கை விடுத்திருப்பதுதான் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal