நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற மாபெரும் வெற்றியோடு, வருகிற 2026 சட்மன்றத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் தி.மு.க. இறங்கியிருக்கிறது. ஆனால், தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டத்திலேயே அ.தி.மு.க. இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக -திமுக இடையே தான் போட்டி இருந்தது. ஆனால் பல தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்திற்கு வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மத்தியில் ஆட்சியில் பங்கெடுக்க முடியாவிட்டாலும் தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி நிச்சயமாக தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகித்த திமுக தலைமையை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டமாக கருதப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதையடுத்து சூட்டோடு சூடாக சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கியிருக்கிறது. வெளிப்படையாக ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின்.

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை… வேட்பாளர் தேர்வு… என அனைத்தையும் கவனிக்க மூத்த அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதில் இளம் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றிருப்பதுதான் அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது. அதாவது, எந்த அமைச்சரும் தங்களுடைய சுய விருப்பு, வெறுப்புக்காக தேர்தலில் எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் உதயநிதி தெளிவாக இருக்கிறார்.

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்… யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள். தற்போது மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெறுவார்களா? அவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா? என்றெல்லாம் தன் மைத்துனர் நடத்தி வரும் நிறுவனம் மூலமாக தனது முதற்கட்ட ஆய்வைத் தொடங்கியிருக்கிறார் உதயநிதி. இந்த வேகத்திற்கு, உத்வேகத்திற்கும், விறுவிறுப்பிற்கும் காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். இரண்டாவது முறையாக முதல்வராகிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.

தி.மு.க.வின் செயல்பாடுகள் விறுவிறுவென 2026 ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொண்டர்கள் சற்று சுணக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சில நிர்வாகிகளிடம் பேசிய போது, ‘‘கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று அனைத்து தேர்தல்களிலும் அவர் தோல்வியை சந்தித்திருக்கிறார். இதனால் சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என எச்சரித்து இருப்பதால் பலர் வாய் திறக்கவே அஞ்சுகின்றனர்.

தற்போது கூட கடந்த வாரம் வரை மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து தான் ஆலோசிக்கப்பட்டது. எதிர்கால திட்டங்கள் குறித்து எந்த திட்டமிடலும் அதிமுகவிலும் இல்லை. மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை அல்லது கண்டு கொள்ளவில்லை. இப்படியே சென்றால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய பின்னடைவை சந்திக்க வேண்டி வரும். கூட்டணியிலும் தேமுதிக தவிர்த்து பெரிய கட்சி எதுவும் இல்லை. எனவே கூட்டணியை வலுப்படுத்த வேண்டியது மிக முக்கியமானதாக இருக்கிறது.

ஆனால் அது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இப்படியே போனால் 2026 தேர்தலும் பெரிய ஏமாற்றத்தை அளிக்கும். எனவே தற்போதைய மாவட்ட அளவிலான நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்கான பணியை முன்னெடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஆளும் தி.மு.க.விற்கு எதிரான அதிருப்தி வாக்குகளை எடப்பாடி பழனிசாமி அறுவடை செய்வாரா? அல்லது மீண்டும் மு.க.ஸ்டாலினை அரியணையில் அமர்த்த எடப்பாடி பழனிசாமி காரணமாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal