வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க டெல்லியில் மத்திய அரசின் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் பிரதமர் மாளிகையான கனபாபனில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் புதுடெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் அவர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், இங்கிலாந்து அரசிடம் ஷேக் ஹசீனா தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பெலாரஸ் நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேச பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். லண்டன் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு தப்பிச் செல்லலாம் எனக் கூறப்படும் நிலையில், இன்று வங்கதேச சூழல் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க உள்ளார்.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்திய பாதுகாப்புத்துறையின் தேசிய ஆலோசகர் அஜித் தோவல், உத்தரபிரதேசம் காசியாபாத்தில் உள்ள ஹின்டன் விமானப்படைத் தளத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். வங்கதேசத்தின் சூழல் குறித்து கேட்டு அறிந்ததோடு, எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஷேக் ஹசீனாவிடம் அஜித் தோவல் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசினாவுக்கு தற்காலிகமாக இங்கு தங்கும் அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹசீனா இங்கிலாந்துக்கு இடம் பெயர்வதற்கான அனுமதி நிலுவையில் உள்ளதால், அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்க வைக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச விவகாரம் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இந்த கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறித்தும், வங்கதேசத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றம், கலவரம் குறித்தும் கூட்டத்தில் விளக்கமளித்து வருகிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். கூட்டத்தில் ராகுல் காந்தி, டிஆர் பாலு போன்ற எதிர்கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.