நெல்லை மேயர் பதவிக்கு திமுக சார்பாக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். 4 வார்டுகளில் மட்டுமே அதிமுக கவுன்சிலர்கள் உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். துணை மேயராக கே.ஆர்.ராஜூ செயல்பட்டார்.

தங்கள் வார்டுகளுக்கு பணிகளை முறையாக ஒதுக்கி தரவில்லை எனக்கூறி திமுக கவுன்சிலர்கள், மேயர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர்கள் 38 பேர் மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையரிடம் மனு அளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் தங்கம் தென்னரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வந்தார். எனினும் அதிருப்திகள் அடங்கியபாடில்லை. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மேயர் சரவணன் நீக்கப்படுவார் என திமுக கவுன்சிலர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி அண்மையில் சரவணன் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதாவது நாளை புதிய மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. நாளை காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி இருந்தால் தேர்தலை நடத்தி பிற்பகலில் முடிவு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கவுன்சிலர்களே பெரும்பான்மை என்பதால், தலைமை அறிவிக்கும் வேட்பாளரே மேயர் ஆவார். இதுவரை நெல்லை மேயர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. நெல்லை மத்திய மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும் எம்.எல்.ஏவுமான அப்துல் வகாப், தனது ஆதரவாளரை மேயர் ஆக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

அப்துல் வகாப்பின் ஆதரவாளர்களே பெரும்பான்மையானோர் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்களாக இருப்பதால், மேயராகவும் தனது ஆதரவாளரே இருக்க வேண்டும் என நினைக்கிறாராம்.

அதேசமயம், திமுக தலைமை, இனி மேயர் விஷயத்தில் எந்த சிக்கலும் வரக்கூடாது என நினைக்கிறது. இதற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், கலந்து பேசி மேயர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, இன்று காலை நெல்லை மாவட்ட திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, கவுன்சிலர்களின் கருத்துகளைக் கேட்டனர். பின்னர் நெல்லை மேயர் வேட்பாளர் கிட்டு பெயரை கூட்டாக அறிவித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal