பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகள் விமர்சித்து மாநில தலைவர் அண்ணாமலை முதல் மாவட்ட தலைவர்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வப்போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை பாஜக நிர்வாகிகள் கடுமையாக குற்றம்சாட்டியும், அவதூறும் செய்தும் வருகின்றனர். இதற்கெதிராக திமுக சார்பாக நீதிமன்றம் மற்றும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தசூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொளத்தூர் பகுதியில் உள்ள பெரவள்ளூரில் கடந்த1ஆம் தேதி பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் நடத்தினர். அப்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகவும், அறுவறுக்க தக்க வகையில் பேசியதாக பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரையடுத்து போலீசார் இன்று காலை வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பாஜக மாவட்ட தலைவர் கைது சம்பவத்தையறிந்த பாஜகவினர் அப்பகுதியில் கூடினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.