திருப்பத்தூர் மக்களை 9 மணி நேரமாக அச்சத்தில் வைத்திருந்த சிறுத்தை நள்ளிரவு 12 மணியளவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிபட்ட சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் அந்த சிறுத்தை எங்கிருந்து வந்திருக்கும் என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்குள் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவரும் நிலையில் சிறுத்தை புகுந்த தகவலால் அச்சம் ஏற்பட்டது. அதே நேரம் பள்ளி வளாகத்தில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த கோபால் என்பவரை சிறுத்தை தாக்கியது. அவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பள்ளிக்கு அருகிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருப்பதால் பதற்றமான சூழல் நிலவியது. பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், வனச்சரகர் சோழராஜன் உள்ளிட்டோர் விரைந்து சென்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.

பள்ளிக்கு அருகிலேயே வேறு ஒரு தனியார் பள்ளியும் இருந்ததால் திருப்பத்தூர் நகரம் பதற்றமான நிலைக்கு சென்றது. சிறிது நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருந்து அருகில் இருந்த கார் பார்க்கிங் பகுதிக்குள் சென்று சிறுத்தை பதுங்கியது. அந்த கார் பார்க்கிங்கில் கார்களில் இருந்த பாஸ்கர், இம்ரான், தினகரன், சாமிஜி உள்ளிட்ட சிலரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சிறுத்தையை பாதுகாப்புடன் பிடிக்க தருமபுரி மற்றும் கிருஷ்ண கிரியில் இருந்து சிறுத்தையை பிடிக்கும் கூண்டுடன் சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். மேலும், கோவையில் இருந்து வன கால்நடை மருத் துவர் சுகுமார் தலைமையிலான குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத் தனர். மருத்துவர் சுகுமார் தலைமை யிலான குழுவினர் கார் பார்க்கிங் பகுதிக்குள் சென்று அங்கிருந்த கார் ஒன்றில் பதுங்கினர். அந்த சிறுத்தை வேறு எங்கும் தப்பிச் செல்லாதபடி கண் காணித்தனர்.

இதற்கிடையில், நள்ளிரவு 12 மணியளவில் ஒரு காரின் அடியில் பதுங்கி இருந்த சிறுத்தை வெளியே வந்து சிறிது தொலைவு நடந்து சென்றது. அந்த நேரத்தில் காருக்குள் பதுங்கி இருந்த மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினர். குறி தவறாமல் சுடப்பட்டதால் சிறுத்தை மயங்கியது. பின்னர், பாதுகாப்புடன் கூண்டுக்குள் ஏற்றப்பட்ட சிறுத்தையை அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுத்தனர். சுமார் 9 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுத்தை பிடிபட்டதால் திருப்பத்தூர் நகர மக்கள் அச்சத்தில் இருந்து விடுபட்டனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிக்க திருப்பத்தூர் நகர பகுதிக்கு சிறுத்தை எப்படி வந்தது என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரிய அளவில் எழுந்துள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘திருப்பத்தூர் நகரில் சிறுத்தை நட மாட்டம் கண்டறியப்பட்டது இதுதான் முதல் முறை. இதற்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்ததில்லை. திருப்பத்தூரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள வெலக்கல்நத்தம் அருகில் கொத்தூர் உள்ளிட்ட 3 காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்புக் காட்டில் சிறுத்தை நடமாட்டம் அவ்வப் போது உள்ளது. அங்கிருந்துதான் சிறுத்தை வந்திருக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டில் திருப் பத்தூர் புதுப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்த தகவல் பதிவாகியுள்ளது. வேறு எங்கும் இல்லாத நிலையில் தற்போது, புதுப்பேட்டையை கடந்து திருப்பத்தூர் நகருக்குள் முதல் முறையாக சிறுத்தை புகுந்துள்ளது. பிடிபட்ட சிறுத்தை 4 முதல் 5 வயதுக்கு உட்பட்ட திடகாத்திரமான ஆண் சிறுத்தை. மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட சிறுத்தைக்கு ஒரு மணி நேரத்தில் மயக்கம் தெளிந்துவிடும். என்பதால், பிடிபட்ட சிறுத்தையை வன கால்நடை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்தனர்.

மயக்கம் தெளிந்த நிலையில் அது இயல்பு நிலைக்கு திரும்பியது. கூண்டுக்குள் அடைபட்ட சிறுத்தை கர்ஜனையுடன் கூண்டை அடிக்கவும் ஆரம்பித்தது. இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ள மாதகடப்பா அடர்ந்த வனப்பகுதியில் அந்த ஆண் சிறுத்தை விடப்பட்டது. அந்த பகுதியில் ஏற்கெனவே சிறுத்தை நடமாட்டம் அதிகம் இருப்பதால் அதன் கூட்டத்துடன் இந்த சிறுத்தை சேர்ந்துவிடும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal