விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்ற ‘மேலிடத்தின்’ உத்தரவே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்ற ‘மேலிட’ உத்தரவு அக்கட்சிக்கு வந்துள்ளது என்பதற்கு அக்கட்சி எடுத்துள்ள முடிவே தெளிவான சான்று. தங்களுக்குப் பதிலாக பாமகவை நிறுத்தி, பாஜகவும், அதிமுக திமுகவுக்கு எதிராக போட்டியிடுகின்றன. திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவதை இண்டியா கூட்டணி உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ப. சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக வலிமையோடு இருக்கிறது. ப.சிதம்பரத்துக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல், ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல் அழைத்துசென்ற காட்சியை பார்த்தோம். தேர்தல் ஆணையம் அதனை கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகள் மாநில அரசுக்கு துணைபுரிகிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு, ஆட்சி அதிகாரம், பணபலத்தை பயன்படுத்தி, பரிசு பொருட்களை கொடுத்து ஈரோடு கிழக்கில் தேர்தல் நடந்தது. இதேபோல், சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டப்பேரவையில் அதிமுக, திமுக கூட்டணியை விட 6 ஆயிரம் வாக்குகள் தான் குறைவு. அப்போதே எங்களுக்கு என்ன வாக்குகள் கிடைக்கும் என்பது தெரிந்துவிட்டது. மறுபடியும் போட்டியிட நினைத்தால் விடமாட்டார்கள்.

சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இடைத்தேர்தல் போட்டியில் இருந்து அதிமுக விலகி இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் பாஜக, அதிமுகவை 3ம் இடத்துக்கு தள்ளி இருக்கிறது. பல தொகுதிகளில் அதிமுக டெபாசிட் பெற முடியாத நிலை ஏற்பட பாஜகவே காரணம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக-வை எதிர்க்கக் கூடிய வலிமையான கட்சி என்றால் அது பாஜகதான் என்ற பேச்சு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி என்றால் தேர்தலில் போட்டியிட வேண்டும். எங்கள் கூட்டணி போட்டியிடுகிறது. தேர்தல் தோல்வி குறித்த பயம் காரணமாக அதிமுக போட்டியில் இருந்து விலகி இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளதை இது நிரூபித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal