விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிட இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததால், மும்முனைப் போட்டி உறுதியாகியிருக்கிறது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடந்த திமுகவுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், “கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு எங்களுக்கு எதிரிகளே இல்லை. இந்த இடைத்தேர்தலில் வெற்றி நிச்சயம்” என்றார்.
இந்தச் சூழலில், பாமக வேட்பாளர் அறிவிப்புக்கு பின் தேர்தல் வியூகம் குறித்து பாமக தலைமை நிலைய நிர்வாகிகளிடம் கேட்டபோது,“தொடர் தோல்வியால் பாமக மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தேர்தலை எங்கள் கட்சி முக்கியமான தேர்தலாக பார்க்கிறது. இத்தேர்தலில் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தும், பாமக தங்களின் நிலையை எடுத்துச் சொல்லி பாஜகவை விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.
இத்தேர்தலில் வன்னியர்களின் வாக்குகள் மற்றும் பிற சமூக வாக்குகளைப் பெறுவதற்காக இத்தொகுதியில் உள்ள 103 ஊராட்சிகளில் பாமக-வினர் முகாமிட்டு, திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் பாமக திட்டமிட்டுள்ளது. மாநில, மாவட்ட அளவில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் தலைமையில் கிராமம் தோறும் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியாற்றுவார்கள்.
இத்தேர்தல் மற்றொரு பென்னாகரம் இடைத்தேர்தல் போல இருக்கும். திமுக நினைப்பது போல இது சாதாரண தேர்தலாக அமையாது. தினமும் ‘ஷூம் மீட்டிங்’ மூலம் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கிராம அளவிலான தேர்தல் பணிக் குழுக்களிடம் பேசுவார்கள். பிரச்சார வியூகமும் மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
கடந்த 2010-ம் அண்டு நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 77,637 வாக்குகளும்,பாமக வேட்பாளர் தமிழ்க் குமரன் 41,285 வாக்குகளும் பெற்றனர். அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் உட்பட 29 வேட்பாளர்கள் டெபாசிட் தொகை இழந்தது குறிப்பிடத்தக்கது.