சமீபத்தில் ‘வேர்ல்டு அப்டேட்’ என்ற நிறுவனம் உலகில் தொண்டர்கள் அதிகம் உள்ள செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சிகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் அ.தி.மு.க. இடம் பிடித்தது. இந்த நிலையில் இரண்டரை கோடி தொண்டர்கள் இலக்கு என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிசாமி வேகமெடுத்திருக்கிறார்.

                  தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளில் மட்டும்தான் கோடிக்கணக்கான கட்சி தொண்டர்கள் உள்ளனர். 1 கோடி உறுப்பினர்களை கொண்ட தி.மு.க.வில் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்குமாறு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிகள் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 4-ந் தேதி உறுப்பினர் சேர்க்கையை அவர் தொடங்கி வைத்தார்.

                  கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஜூன் 3-ந்தேதிக்குள் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கேற்ப ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக 50 ஆயிரம் பேர் வீதம் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கும் பணியில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக பணியாற்றினார்கள்.

                  இந்த நிலையில்தான் ஒன்றரை கோடிகோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கம் அ.தி.மு.க. என்று ஜெயலலிதா பெருமையுடன் சொல்வது வழக்கம்.  அவரது மறைவுக்கு பிறகு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் அணி என அ.தி.மு.க. 3 பிரிவாக கிடக்கிறது. ஆனாலும் கீழ்மட்ட தொண்டர்கள் இன்னும் ‘இரட்டை இலை’ மீது பாசம் பற்று கொண்டு அ.தி.மு.க.வில் பயணித்து வருகின்றனர்.

                   ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்துக்கு மேலும் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து 2 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக அ.தி.மு.க.வை பலம் கொண்ட கட்சியாக மாற்ற வேண்டும் என்று எடப்பாடி தீவிர முயற்சி மேற்கொண்டார். 

                   ஆனால் தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுவதால், அதைவிட கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக உருவாக்க எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

                       இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து இதுவரை 10 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் போரூர் வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் மூலம் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

                      இப்போது ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை தலைமைக் கழகத்தில் சமர்ப்பித்தும் வருகின்றனர். ஒரு விண்ணப்ப படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்த்து வருவதால் 10 லட்சம் விண்ணப்பப் படிவம் மூலம் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. உருவாகும் என்று கட்சியின் மேலிட தலைவர்கள் கூறி வருகின்றனர்.

                 எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகி விட்டதால் புதிய உறுப்பினர் அட்டையை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துடன் நவீன முறையில் அச்சடித்து வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக தலைமைக் கழகத்தில் தனியாக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தான் உறுப்பினர்களை சேர்ப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.                  

ஆனால் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இந்த அளவுக்கு முயற்சிகள் மேற்கொள்ளாமல், அடுத்தவர் முதுகில் எறி சவாரி செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal