கடந்த காலங்களில் காவல் பணியில் சேருவதற்கு, எழுத்துத் தேர்வு எழுதி காத்திருந்த காலம் போய், தற்போது ஒரே மாதத்தில் முடிவுகள் வெளியாகி, அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக 2-ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2023-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ம்வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்.19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வுக்கு வருகின்ற செப்டம்பர் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக காவல் துறையில் 750 காலி பணியிடங்களை நிரப்ப, சமீபத்தில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் உள்ளதாவது:

“காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் (எஸ்ஐ) மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 722 (ஆண்கள் – 1,45,804, பெண்கள் – 40,885 மற்றும் திருநங்கைகள் 33) பேர் விண்ணப்பித்திருந்தனர்.

பொது விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ்மொழி தகுதித் தேர்வு 33 மாவட்ட மற்றும் மாநகர மையங்களில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. மறுநாள், காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான துறை தேர்வு 12 மையங்களில் நடைபெற்றது. எழுத்துத் தேர்வு முடிவுகள் ஒரு மாத காலத்துக்குள் வெளியிடப் படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்” என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

டி.ஜி.பி. சங்கர் ஜிவாலின் இந்த அதிரடி அறிவிப்பு, வேலைக்காக காத்திருப்பவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal