நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலத்திற்கு மேல் இருக்கிறது. ஆனாலும், அரசியல் கட்சிகள் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில்தான் பெரம்பலூர் தொகுதி ‘ஸ்டார்’ தொகுதி அந்தஸ்தை பெற்றிருக்கிறது.

பெரம்பலூர் தொகுதி ‘ஸ்டார் தொகுதி’ அந்தஸ்தை பெறுவதற்கான காரணம் என்ன? அப்படி யார் போட்டியிடப் போகிறார்கள் என அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடப் போவது உறுதியாகிவிட்டது. முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசி முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதனால்தான் ‘ஸ்டார் அந்தஸ்தை’ பெற்றிருக்கிறது.

காரணம், தி.மு.க.வில் உள்ள சீனியர்களில் ஸ்டாலின், துரைமுருகன், அடுத்து மூன்றாவது இடத்தில் அமைச்சர் கே.என்.நேரு இருக்கிறார். தவிர, இதுவரை அரசியலில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லாத அருண் நேருவிற்கு அமைச்சருக்கு உண்டான மரியாதையை கொடுத்து வருகிறார்கள் உடன் பிறப்புக்கள்!

அமைச்சர் கே.என்.நேரு அரசுப் பணிகள் காரணமாக சென்னை, பிற மாவட்டங்கள் என வட்டமடித்துக்கொண்டே இருப்பதால், கட்சியினரின் நிகழ்ச்சிகளில் அருண் நேருதான் கலந்துகொண்டிருக்கிறார். எனவே, அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி என அடித்துக் கூறுகின்றனர் உடன் பிறப்புக்கள்! தவிர, உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் ந.அசோகன், துறையூர் மெடிக்கல் முரளி ஆகியோர் தற்போதே களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

தி.மு.க.வில் நிலவரம் இப்படி இருக்கும் போது, அ.தி.மு.க.வில் நிலவரம் எப்படி இருக்கிறது என மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.

‘‘சார், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் ஒரே கட்சி இரண்டு முறை வெற்றி பெற்றதில்லை. தற்போது, எம்.பி.யாக இருக்கும் பாரிவேந்தர் (பச்சை முத்து) தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று நன்றிக்கூட சொல்ல வரவில்லை. தேர்தலில் போட்டியிடும் போது, ஒன்றியச் செயலாளர்கள் முதல் நிர்வாகிகளுக்கு பணத்தை லட்சக்கணக்கில் வாரியிறைத்தார். இதனால் தி.மு.க. நிர்வாகிகள் பலனடைந்தார்களே தவிர, ஓட்டுப் போட்ட மக்கள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த முறை பாரிவேந்தர் இங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்பதால், கள்ளக்குறிச்சி பக்கம் தனது ‘ஸ்போகஸை’ திருப்பியிருக்கிறார்.

அ.தி.மு.க.வில் யார் போட்டியிட்டாலும், அருண் நேருவை எதிர்த்து வெல்வது கடினம். அ.தி.மு.க.வில் ஏற்கனவே கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருக்கிறது. எனவே, அருண் நேருவை வீழ்த்த வேண்டும் என்றார், அரசியலில் அவப் பெயர் எடுக்காத புதுமுகத்தை களத்தில் இறக்கினால் வெற்றி பெறலாம். அந்த புது முகம் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். காரணம், முத்தரையர் சமுதாய மக்கள்தான் அதிகளவில் அங்கு வசிக்கின்றனர். எனவே, அந்த புதுமுகத்தை எடப்பாடி பழனிசாமிதான் அடையாளம் கண்டு களத்தில் இறக்க வேண்டும். பெரம்பலூர் எம்.பி. தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் திருச்சி புறநகர் பகுதி மக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal