ஆச்சர்யம்… ஆனால், உண்மை… பொதுமக்கள் வங்கிக் கணக்கில் திடீரென்று ரூ.1 லட்சம் வரை டெபாசின் ஆனதுதான் அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது-.
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு லட்சம் வரை டெபாசிட் ஆனது. வங்கிக் கணக்கில் பணம் வந்தது குறித்து அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது.
எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இதனை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.
ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட்டான பணத்தை ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர். ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர். இந்த செய்தி மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. எஸ்.எம்.எஸ் வராத வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரி பார்த்தனர்.
இதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது இந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆனது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.