சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள், குற்றச்சம்பவங்கள் குறித்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை அறியாமல் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்கள் பல லட்சங்களை இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், டெலிகிராம் என்ற செயலி மூலம் நேகா என்கிற மெகர் என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டார். பின்னர் வாட்ஸ்-அப் மூலம் இருவரும் பேச ஆரம்பித்தோம். அப்போது அவர் எனது கணவர் துபாயில் பணிபுரிகிறார். இதனால் நான் தனிமையில் தவிக்கிறேன். உங்களுடன் உடலுறவில் ஈடுபட விரும்புகிறேன் என கூறியதோடு அவரது புகைப்படங்கள் மற்றும் முகவரியை கூறினார்.
அதன்படி சம்பவத்தன்று நான் மெகர் வீட்டுக்கு சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென நுழைந்து ஏன் இங்கு வந்தீர்கள் என கூறி என்னை தாக்கினர். பின்னர் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து ரூ.3 லட்சம் தராவிட்டால் நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து செல்வோம் என மிரட்டினார். இரவு வரை என்னை சிறைப்பிடித்து வைத்திருந்த அந்த கும்பல் என்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டுகளை பறித்து கொண்டதோடு கூடுதலாக ரூ.2 லட்சம் கேட்டனர்.
அப்போது என்னுடைய கிரெடிட் கார்டு வீட்டில் இருப்பதாக கூறி நான் வீட்டுக்கு முயன்றபோது ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்தேன். என்னை கடத்தி தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபரை கடத்தி தாக்கி பணம் பறித்த கும்பலை சேர்ந்த சரண பிரகாஷ், அப்துல் காதர், யாஷின் என்பது தெரிய வந்தது.
அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட நேகா என்ற மெகர் மும்பையை சேர்ந்த மாடல் அழகி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று அவரை பிடித்தனர். மாடல் அழகி நேகா ஹனிடிராப் முறையில் தொழில் அதிபர்கள், வாலிபர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் செல்போன் செயலிகள் மூலம் உரையாடி உள்ளார்.
அப்போது கொஞ்சி குலாவி பேசி அவர்களை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். பின்னர் அவர்களை வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அங்கு வருபவர்களை வீட்டு வாசலுக்கு பிகினி உடையில் கிளுகிளுப்பாக சென்று வரவேற்று உள்ளே அழைத்து சென்று விடுவாராம். ஏற்கனவே வீட்டிற்குள் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி உள்ள நிலையில் வீட்டுக்குள் வருபவர்களை நேகா பிகினி உடையில் கட்டி அணைத்ததும் அதனை சரண பிரகாஷ், அப்துல் காதர், யாஷின் ஆகிய 3 பேரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர். இதுவரை அந்த கும்பல் 50-க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் ரூ.35 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.