வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பினர் மீது 2 பட்டாசுகளை வீசினர். இதில் அந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது.
தகவல் அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு வெடித்து சிதறி கிடந்த பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் மாணவர்கள் வீசியது திருவிழாகாலத்தில் பயன்படுத்தப்படும் பூண்டு பட்டாசு என்பது தெரிந்தது. கல்லூரியில் பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வரும் தனுஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கானாபாட்டு பாடல் பாடிய தாவரவியல் படிக்கும் மாணவர்களை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த தகராறில் தாவரவியல் படிக்கும் மாணவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக நேற்று காலை கல்லூரிக்கு வந்த தனுஷ் மற்றும் உடன் படிக்கும் நண்பர்கள் எதிர்தரப்பு மாணவர்கள் மீது பூண்டு பட்டாசை கொளுத்தி போட்டு இருப்பது தெரிந்தது.
இந்த மோதல் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் 18 மாணவர்களை நேற்று அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதில் 3-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர், 2-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர் ஆகும். இதற்கிடையே மோதலில் ஈடுபட்டதாக 10 மாணவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிக்குள் கோஷ்டிகளாக மோதலில் ஈடுபட்ட மற்ற மாணவர்கள் யார்?யார்? என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.