சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது. கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு செல்வதை ரஜினி தவிர்த்து வந்தார். இமயமலை பயணத்தையும் அவர் ஒத்தி வைத்திருந்தார். “அண்ணாத்த” படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு சென்றார். அந்த பயணம் குறுகிய கால ஆன்மீக யாத்திரையாக இருந்தது. அவர் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்த படம் ரஜனி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து மீண்டும் இமயமலை பயணத்தை தொடங்க ரஜினி முடிவு செய்தார்.
அதன்படி இன்று (புதன்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை தொடங்கினார். இன்று காலை 8 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். ஆனால் அவர் விரிவாக பதில் அளிக்க மறுத்து விட்டார். ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். பெங்களூரில் இருந்து அவர் இமயமலைக்கு பயணமாகிறார். இமயமலையில் ஒரு மாதம் வரையில் தங்கி இருக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று ஓய்வு எடுப்பதையும் அங்கு சாதாரண மனிதர்களை போல் காவி வேட்டியுடன் சுற்றி திரிவதையும் அதிகம் விரும்புவார்.
அந்த வகையில் தற்போது இமயமலை பயணத்தை மேற்கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அங்கு எப்போதும்தான் தங்கும் விடுதிக்கு சென்று ஓய்வெடுக்கிறார். இந்த விடுதி ரஜினியால் கட்டப்பட்டதாகும். ரஜினிகாந்த் தனது இமயமலை சுற்றுப்பயணத்தின் போது சித்தர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தனது ஆன்மீக குருவான பாபாஜி குகைக்கு சென்று வழிபடவும் முடிவு செய்துள்ளார். மேலும் அவர் ரிஷிகேஷ், கேதர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளார். இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த நேரங்களில் எல்லாம் ரஜினிகாந்த் நினைத்த இடங்களுக்கு எப்போதும் சென்று சராசரி மனிதர்களை போல வாழ்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தற்போதைய சுற்றுப்பயணத்தையும் மன அமைதியுடன் ரஜினி மேற்கொள்ள உள்ளார்.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்த போது குதிரை சவாரியில் ஈடுபட்டிருந்தார். டீ கடையில் நின்று அங்கிருந்தவர்களுடன் பேசிக்கொண்டே டீ குடித்தார். இந்த புகைப்படங்கள் எல்லாம் அப்போது வெளியாகி வைரலாக பரவியது. அவரது எளிமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. தற்போதைய இமயமலை சுற்றுப் பயணத்தின் போதும் ரஜினிகாந்த் அது போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முடிவு செய்துள்ளார். ரஜினிகாந்தை பொறுத்த வரையில் கடவுள் மீது அதிகம் பக்தி கொண்டவர். தொடக்கத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வதை அதிகம் விரும்பினார். பின்னர் ராகவேந்திரா சுவாமிகள் மீது அவருக்கு பக்தி ஏற்பட்டது. ராகவேந்திரர் வேடத்தில் நடித்த அவர் ராகவேந்திரருக்கு ஆலயங்கள் கட்டுவதற்கும் பலருக்கு உதவி உள்ளார்.
இந்த நிலையில் இமயமலையில் இன்றும் உயிரோடு இருப்பதாக கருதப்படும் பாபாஜி பற்றி ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாபாஜி பற்றி மேலும் அறிந்து கொள்ள அவர் இமயமலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் பிறகு பாபாஜியை தனது ஆன்மீக வழிகாட்டியாக ரஜினி ஏற்றுக் கொண்டார். இமயமலை பயணத்தின் போது அங்குள்ள பாபாஜி குகைக்கு சென்று தினமும் தியானம் செய்ய ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இமயமலையில் உள்ள சாமியார்களையும் ரஜினி சந்திக்கிறார். பாபாஜி குகையில் தியானம் செய்வது தனக்கு மிகுந்த மன நிறைவையும் நிம்மதியையும் தருவதாக ரஜினிகாந்த் பலமுறை தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் இந்த தியானமும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு தடவை அவர் மனைவி லதாவுடன் சென்று பாபாஜி குகையில் தியானம் செய்து இருக்கிறார். மீண்டும் அதுபோல அனுபவத்தை பெறவே தனது தற்போதைய இமயமலை பயணத்தையும் அமைத்துக் கொள்ள ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.
இமயமலையில் தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை தினமும் மேற்கொள்ள ரஜினி முடிவு செய்திருக்கிறார். இந்த பயணத்தின் போது தனக்கு உறுதுணையாக இருப்பதற்காக உதவியாளர் ஒருவரை ரஜினிகாந்த் அழைத்துச் சென்றுள்ளார். கடந்த முறை நண்பர் ஒருவருடன் இமயமலை பயணத்தை ரஜினி மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இமயமலைக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் “ஜெயிலர்” படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து விட்டு கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஒரு மாத கால இமயமலை பயணம் முடிந்த பின்னர் அடுத்த மாதம் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.