ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், (வயது 52). சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ம் தேதி உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போல வந்தவர்கள், அவரை கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.
அண்ணாநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரணடைய முயன்ற, ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை கிராமத்தைச் சேர்ந்த பாலு, (வயது 39), சென்னை குன்றத்தூர் திருவேங்கடம் (வயது 33) உட்பட 11 பேரை கைது செய்தனர். ரவுடி திருவேங்கடம், நேற்று அதிகாலை போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது 10 பேர் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று(ஜூலை 15) சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியிருப்பதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை முழுவதும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஜாமினில் இருக்கும் ரவுடிகள் நிபந்தனைகளை மீறினால் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.