நடிகை ராதா அளித்த செக் மோசடி புகார் தொடர்பாக, அம்பிகாவை விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. ராதா தனது அக்கா அம்பிகா, தம்பி மல்லிகார்ஜுன் மீது ரூ.46 கோடி மோசடி புகார் அளித்திருந்தார்.நடிகை ராதா அளித்த செக் மோசடி புகார் தொடர்பாக போலீஸார் புதிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது அக்கா அம்பிகா மற்றும் தம்பி மல்லிகார்ஜுன் ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் அளித்திருக்கிறார். இருவரும் தனது 46 கோடி ரூபாய் பணத்தை செக் மோசடி மூலம் எடுக்க முயன்றதாக ராதா பரபரப்பு புகாரை அளித்தார். இதற்கு விளக்கம் அளித்த நடிகை அம்பிகா, ‘‘சொத்து தகராறை தீர்க்க ரூ.46 கோடிக்கான காசோலைகளை வழங்கியது ராதாதான். சொத்து விஷயத்தில் மொத்தம் தர வேண்டியது 97 கோடி ரூபாய்.

எங்கள் அம்மா இறந்தபோது செட்டில்மென்ட் தொடர்பாக பேசி முடிவு செய்யப்பட்டது. ஆனால் சொன்னபடி செட்டில்மென்ட் செய்யப்படவில்லை. நான் திருடியதாக ராதா சொன்னதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் கையெழுத்திட்ட செக் எனக்கு தர வேண்டிய சொத்தின் பங்கிற்காக அவரே கொடுத்தது. கடைசியில் செக் கொடுத்துவிட்டு, அதை தடுத்து நிறுத்தியதும் அவர் தான்.

ராதாவின் கணவர் தான் என்னை மரியாதை இல்லாமல் பேசுகிறார். சட்டபூர்வமாக சென்று விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும். தங்களின் தாயின் விருப்பம் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும். ராதா சமரசத்திற்கு வந்தால் பார்க்கலாம். ராதாவின் கணவர் தான் இந்த பிரச்னைக்கு காரணம். 97 கோடி பணம் ராதாவிடம் இருந்து எங்களுக்கு வர வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் இந்த வழக்கில் நடிகை ராதாவிடம் நேற்று மூன்று மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. அடுத்தக்கட்டமாக நடிகை அம்பிகாவை விசாரணைக்கு அழைக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நடிகை அம்பிகா இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு புகார் உகந்ததா? எனவும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பிய காவல்துறை தற்போது நடிகை அம்பிகாவை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal