செம்மன் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் தாமதமாக மேல் முறையீடு செய்திருக்கும் சம்பவம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உள்ளிட்டோர் செம்மண் முறைகேடு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனு 166 நாட்கள் தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தாமதத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பாக பொன்முடி உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட செம்மண் வழக்கு மீண்டும் நீதிமன்ற கவனத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், க. பொன்முடி உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகச் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இதன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதில் 166 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தத் தாமதத்தை மன்னித்து மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி தனியாக மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீடு தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை ஏற்றுக்கொள்ளக் கோரும் மனுவுக்கு பதிலளிக்கும்படி பொன்முடி உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தாமதத்தை ஏற்கலாமா என்பது குறித்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே நீதிமன்றம் முடிவெடுக்கும். அதன்பிறகே மேல்முறையீட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal