கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. ஆபாச மெசேஜ் கொடுத்த வழக்கை விசாரிக்க பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று (நவம்பர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் ஆட்சியர் தரப்பிலிருந்து நேரடியாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுந்தது.

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், அதுவரை பெண் ஆட்சியரிடமிருந்து நேரடியாகப் புகார் பெறப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாநாஸிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். அதில், தனக்கு முறையற்ற குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகவும், பொது நிகழ்ச்சிகளில் தேவையற்ற வகையில் நெருங்க முயன்றதாகவும் அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டுகளை பெண் ஆட்சியர் முன்வைத்திருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று (நவம்பர் 24) மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அருள் விக்னேஷ் மீதான வழக்கின் விசாரணையை ஐஜி அந்தஸ்து அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும், டிசம்பர் 22-ந் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.

மேலும், பெண் ஆட்சியரின் அடையாளத்தையும் விசாரணை தொடர்பான ரகசிய விவரங்களையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்றும், அவரைப் பாதிக்கும் சமூக வலைதளப் பதிவுகளை சைபர் கிரைம் போலீசார் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் குழு அமைப்பது தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஸ்டி சிங் வழக்கின் விசாரணை அதிகாரியாகச் செயல்படுவார். மேலும், ஐஜி காமினி இந்த வழக்கின் விசாரணையை மேற்பார்வையிடுவார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal