தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு கிளம்புவதால், இந்த எதிர்ப்பிலிருந்து தப்பிப்பதற்காக புது டெக்னிக்கை கையாண்டு வருகிறார். இதனால் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் தற்போது எதிர்ப்பு குறைந்து வருகிறது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. கள நிலவரங்களை பார்த்தால் மதுராந்தகத்தை விட தாராபுரத்தில் தவெகவுக்கு கடுமையாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது.

மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் இடைத்தேர்தலில் அவர்கள் இருவருமே தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தேர்தல் நடந்து முடிந்து 3 மாதங்களிலேயே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தவர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரையும் சில இடங்களில் வாக்கு சேகரிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் தாராபுரத்தில் சத்தியபாமாவை சில இடங்களில் உள்ளே விடாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் இவரை வேட்பாளராக அறிவித்த போதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தாராபுரத்தை சேர்ந்த சத்தியபாமா சில இடங்களில் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று மூலனூர் பேரூராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவரது பிரச்சார வாகனத்தில் முதல்வரின் உருவச்சிலையை வைத்து வாக்கு சேகரித்தார். இதே போல் கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட கும்பகோணம் தவெக வேட்பாளர் வினோத் ரவி என்பவர் விஜய்யின் 3டி ஹாலோகிராம் காட்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்தார். கொளத்தூர் தொகுதி வேட்பாளர் வி.எஸ்.பாபுவும் விஜய்யின் சிலைகளை வைத்து வாக்கு சேகரித்தார். அவ்வாறு வாக்கு சேகரித்த இருவருமே வெற்றி பெற்றுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal