சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் போட்டியிட்டார். அவருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சீனிவாச சேதுபதி களமிறங்கினார். இதில், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்று வென்றார். அதாவது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றியை தட்டி சென்றார்.
இது மிக குறைந்த வாக்கு வித்தியாசம் என்பதால், தேர்தல் முடிவு தொடர்பாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதில், தனது தொகுதிக்கான ஒரு தபால் வாக்கு தவறுதலாக வேறு திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த வாக்கு தனது தொகுதி கணக்கில் சேர்க்கப்படாததால் தேர்தல் முடிவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு எதிராக சீனிவாச சேதுபதி தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்று பெரிய கருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
