த.வெ.க ஆட்சி அமைந்தவுடன், ‘மக்கள் பணத்தை ஒரு பைசா கூட தொடமாட்டோம். தொடவும் விடமாட்டோம்… தொட்டவங்களையும் விடமாட்டோம்’ என்றார் முதல்வர் விஜய். அந்த வகையில் தி.மு.க. அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி, வழக்குப் பதிவு செய்து வருகிறது.
திருவண்ணாமலை அடுத்த மலைப்பாம்பாடி பகுதியில் செயல்பட்டு வந்த அருணாச்சலா சுகர் மில்லை, ரிஷி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பொது ஏலத்தின் மூலம் விற்கப்பட்ட போது அதனை அருணை புராடக்ட்ஸ் அண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது.
அதாவது மலப்பாம்பாடி மற்றும் பள்ளிப்பட்டு கிராமங்களில் அமைந்துள்ள சுமார் 124.56 ஏக்கர் நிலத்தை திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது எ.வ.வேலு, அவருடைய மகனும், அருணை புராடக்ட்ஸ் அண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனருமான குமரன் சுமார் 46 கோடிக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது மகன் குமரன் இடத்தை சமன் செய்து திமுக இளைஞரணி மாநாடு நடத்துவதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மலப்பாம்பாடி ஏரியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி ஆழத்திற்கு சட்ட விரோதமாக மண்ணை அகற்றி தனது மகன் இடத்தை சமன் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகம், மாநகராட்சி மற்றும் பிற அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உடந்தையாக செயல்பட்டு சுமார் 45 லட்சத்து 72 ஆயிரத்து 058 கன அடி கொண்ட சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் மண் எடுத்துச் சென்று சமன் செய்ததாகவும், இதன் மதிப்பு சுமார் 8 கோடியே 22 லட்சத்து 97 ஆயிரத்து 044 ரூபாய் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும், நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்ததாரராக இருக்கக்கூடிய பாண்டிதுறையின் மனைவி ரிஷி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி என்றும் சொல்லப்படுகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரால் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட மாவட்ட அரசிதழில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில குளங்கள் விவசாய நோக்கங்களுக்காக களிமண் வண்டல் மற்றும் கற்கள் அகற்றுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்ட நீர் நிலைகளின் பட்டியலில் மலபாம்பாடி ஏரி சேர்க்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும் திமுக வடக்கு மண்டல இளைஞர் அணி மாநாட்டில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதை கருதி மலப்பம்பாடி கிராமத்தில் உள்ள அமைச்சரின் மகன் குமரனுக்கு கலைஞர் திடல் என்று பெயர் கொண்ட இடத்துக்கு ஏரியிலிருந்து மண் எடுத்து வரப்பட்டு சமன் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மலப்பாம்பாடி ஏரியிலிருந்து சரளை கற்கள் அல்லது ஏரி படுக்கை சார்ந்த பொருட்களை எடுப்பதற்கோ அகற்றுவதற்கோ இடத்தின் உரிமையாளர் குமரன் மாநகராட்சி இடமோ அல்லது திருவண்ணாமலை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறையிடமிருந்து எந்த அனுமதியும் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. அமைச்சரின் மகன் குமரன் அமைந்துள்ள இடத்திற்கு செல்வதற்கு சட்டவிரோதமாக அணுகு சாலை அமைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனை மற்றும் விசாரணையின் அடிப்படையில், சுமார் 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அவரது மகன் கம்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இருவர் தொடர்ந்த வழக்கில் தற்போது எஃப்ஐஆர் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக சொல்லப்படும் நிலையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விரைவில் வேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கேஎன் நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் என முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் எவ வேலுவும் சேர்ந்து இருக்கிறார்.
