கரூர் கூட்ட நெரிசல் துயரத்தின் முதலாமாண்டு நினைவு நாளை அடுத்து முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி தனது வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தும் தனது எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமான பதிவை பதிவிட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. பிரச்சார கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததும், பரப்புரைக்கான ஏற்பாடுகளை சரியான முறையில் செயல்படுத்தாததும் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘கடந்த ஆண்டு இதே நாள், மக்கள் விரும்பும் மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக மக்களுக்கு ஆலமரமாகத் திகழும் வெற்றித் தலைவர் அவர்களுக்கும், அந்த ஆலமரத்தின் நிழலாய்த் தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்கள், வெற்றித் தலைவர் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரது நெஞ்சங்களிலும் தீரா வலி ஏற்பட்டு, அழியாச் சுவடு உருவான நாள்!

மாற்றத்தை உருவாக்க நினைத்து, மக்கள் நலன் காக்கத் துணிந்த மக்கள் தலைவரின் பயணத்தில், யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு நடைபெற்ற நாள்!

தமிழக மக்களின் விடிவெள்ளியாய்த் திகழும் நம் வெற்றித் தலைவர் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் நம் இரத்த சொந்தங்களைப் பிரிந்து ஓராண்டாய்த் தவிக்கும் நம்மை வாரி அனைத்து ஆறுதல் சொல்ல, அவரன்றி, வேறொருவர் உண்டோ? நம் கரூர் சொந்தங்களே!

இந்நாளில், நம் நெஞ்சில் குடியிருக்கும் பிரிந்த நம் சொந்தங்களுக்கு வெற்றித் தலைவர் அவர்களின் வழியில் எனது மலரஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன்’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal