கரூர் கூட்ட நெரிசல் துயரத்தின் முதலாமாண்டு நினைவு நாளை அடுத்து முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி தனது வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. பிரச்சார கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததும், பரப்புரைக்கான ஏற்பாடுகளை சரியான முறையில் செயல்படுத்தாததும் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கிட்டத்தட்ட 30 நாட்களுக்குப் பிறகு கரூர் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, சரியாக அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். இதுவும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறுவதற்கு பதிலாக அவர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமர்சனத்தை அதிகப்படுத்தியது. விஜய்க்கு ஆதரவும் எதிர்ப்புமாக தமிழக அரசியல் களம் பிளவுபட்டது.

இந்த நிலையில், கரூர் துயரம் நடந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைவதை அடுத்து முதலமைச்சர் விஜய் தனது வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.

சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal