கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை கொளத்தூர் தொகுதியில், த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க., வேட்பாளரும், அக்கட்சி தலைவருமான ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முறைகேடுகள் நடந்துள்ளதால், இரண்டாம் இடத்தில் உள்ள என்னை வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் வழக்கு இன்று (ஆகஸ்ட் 31) மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபல் வாதிடுகையில், ‘‘தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.
இதையடுத்து தேர்தல் கமிஷன் தரப்பில், ‘‘எம்எல்ஏவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இதே கோரிக்கையுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், இந்த வழக்கை ஏற்கக் கூடாது” என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கை திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதியளித்தனர்.
