சென்னையில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், தேர்தலில் நிற்கலாம் என கூறினார். மேலும் நடிகர் தனுஷ் முதல்வர் விஜய்க்கு போட்டியே இல்லை என அவர் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை அம்மன் கோயில் தெரு மற்றும் சிவாஜி நகர் பகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளன.

புதிய சுகாதார மற்றும் அங்கன்வாடி மையங்களை அமைச்சர் மரிய வில்சன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் ஆகாயத் தாமரை அகற்றும் பணிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு வட்டார துணை ஆணையர் ஸ்வேதா சுமன், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர் விமலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்துக் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், ‘‘தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்துப் பேசுகிறீர்கள்; அவர் அரசியலுக்கு வரட்டும், அது அவருடைய விருப்பம். ஆனால், முதலமைச்சருக்குப் போட்டியெல்லாம் தமிழ்நாட்டில் எப்போதுமே வாய்ப்பே கிடையாது. தயவுசெய்து அந்த கேள்வியை நீங்கள் வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள். இங்கே ஒன் அண்ட் ஒன்லி முதலமைச்சர் என்பதுதான் எதார்த்தம். கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் சேர்த்து, தமிழ்நாட்டு மக்கள் மிகச் சிறந்த ஒரு பாடத்தை வழங்கியுள்ளனர்.
இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்; யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அது முழுக்க முழுக்க அவரவர்களின் சொந்த முடிவு. ஆனால், அரசியல் களத்தில் காம்படிஷன் என்று பார்த்தால், அது திமுக மற்றும் அதிமுக இடையேதான் இருக்குமே தவிர வேறு யாருக்கும் அங்கு வாய்ப்பில்லை. நடிகர் தனுஷ் எனக்கு நன்றாகத் தெரியும், அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். இருப்பினும், அவர் ஒரு முடிவை எடுத்துள்ளார்; அவர் வரப்போகிற நாட்களில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளின் மூலமாகத்தான் அவருடைய முடிவு சரியா தவறா என்பது தெரியவரும்’’ என்றார்.
விஜய் என்ற பிம்பத்தை எதிர்கொள்வதற்காகத் திராவிடக் கட்சிகள் தனுஷை கையில் எடுத்துள்ளனவா என்ற கேள்விக்கு, “அது சமூக வலைதளங்களில் பேசப்படும் விஷயங்களாகும். கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், 1991, 1994, 1993 எம்பி தேர்தல், 1996 மற்றும் 1999 தேர்தல்கள் என அனைத்தையும் நாங்கள் பார்த்துள்ளோம். யார் யாருக்கு மக்கள் குரல் கொடுத்தார்கள், எங்கு என்ன ரீச் ஆனது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். 2026-ம் ஆண்டிலும் கூட எத்தனையோ அரித்மெட்டிக் கால்குலேஷன்களும், பெரிய அளவிலான கூட்டணிக் கணக்குகளும் போடப்பட்டுப் பார்த்தாயிற்று. ஆனால், மக்கள் எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்து கொண்டு மிகச் சரியான தீர்ப்பை வழங்கினார்கள்.
இப்போது மீண்டும் இன்னொரு ஸ்டார் வருகிறார்கள், அவரை வைத்து அரசியல் களத்தில் ஒரு டர்னிங் பாயிண்ட் உருவாக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், அங்கே டர்னிங் பாயிண்ட் எதுவும் இருக்காது, ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சும். ரஜினிகாந்தை வைத்துப் பிரச்சாரம் செய்தால் மக்கள் அப்படியே மாறிவிடுவார்கள் என்று முன்பு கூறினார்கள். அதற்கெல்லாம் காலம் ஏற்கனவே தக்க பதிலைக் கொடுத்துவிட்டது. எனவே, யார் பிரச்சாரம் செய்தாலும், மக்கள் ஏற்கனவே தங்களுடைய தீர்ப்பை முழுமையாக வழங்கிவிட்டதால், அதற்கெல்லாம் இனிமேல் தேவையோ காலமோ இல்லை’’ என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்துள்ள பிரபல தமிழ் நடிகர் தனுஷ், அடுத்து அரசியல் பாதையை நோக்கிச் சுவடு பதிக்க ஆயத்தமாகி வருவதாக தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பு உருவாகியுள்ளது.
தனது ரசிகர் மன்றங்களை ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்ற பெயரில் மறுசீரமைத்து புதிய கொடி மற்றும் நலத்திட்ட உதவிகளை வேகப்படுத்தியுள்ள நடிகர் தனுஷ், டெல்லியில் முக்கிய அரசியல் வியூக நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தவெக தலைவர் விஜய்யை தொடர்ந்து, தனுஷின் இந்த அடுத்தகட்ட நகர்வுகள், தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
