‘‘ரேஷனில் தப்பித்தவறி கை வைக்கலாம் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்கள் கதை முடிந்துவிடும்’’ என த.வெ.க.வுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, ரேஷன் அரிசி தொடர்பாக தவெக அமைச்சர்கள் கூறிய கருத்தை கடுமையாக சாடினார். பெ சண்முகம் கூறியதாவது:-

‘‘ரேஷன் அரிசி வாங்கி யாரும் சாப்பிடுவது இல்லை. எல்லாம் ஆடு மாடு, கோழிக்குதான் போட்டு கொண்டு இருக்கிறர்கள் என்று செங்கோட்டையன் கூறுகிறார். அப்புறம் இன்னொரு அமைச்சர் சொல்கிறார், ரேஷன் அரிசியை யாரும் சோறு ஆக்கி சாப்பிடுவது இல்லை. இட்லி தோசைக்கு தான் பயன்படுத்துகிறார்கள். இட்லி தோசை எல்லாம் உணவு கணக்கில் வராதா? சட்டமன்றத்தில் இதெல்லாம் நடைபெற்ற விவாதம். மக்கள் யாரும் அதை சாப்பிடுவதே இல்லை. சாப்பிடுகிற மாதிரி இருந்தால்தான் சாப்பிடுவார்களே.. அதில் என்ன பெருமை வேண்டியுள்ளது. செங்கோட்டையனிடம் நான் கேட்க விரும்புவது மக்கள் சாப்பிடுகிற மாதிரி அரிசியாக இருந்தால் சாப்பிடுவார்கள். இந்த மாதிரி காரணத்தை சொல்லி.. ரேஷன் கடைகளில் அரிசி போட வேண்டாம் என்ற அறிவிப்பை நோக்கி போய்விடுவார்களோ என்று எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது.

20 கிலோ இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. பல லட்சக்கணக்கான குடும்பங்கள் அதை நம்பித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தனித்து வாழக்கூடிய ஏராளமான பெண்கள், முதியவர்களுக்கு அதுதான் அவர்களின் உயிரை காப்பாற்றிக்கொண்டு இருகிறது. அதெல்லாம் அவர்களுக்கு தெரியுமா தெரியாதா? என்று தெரியவில்லை.

அமைச்சர்கள் ஓட்டு கேட்டு போகிற மாதிரி, ரேஷன் அரிசி யார் யாரெல்லாம் வாங்குகிறீர்கள். என்ன பண்ணூறீங்க என்று கேளுங்கள். கேட்டீர்கள் என்றால் அவர்கள் சொல்வார்கள். ஆனால் இங்கே சபையில் உட்கார்ந்து கொண்டு சொல்வதை விட தெருவில் போய் மக்களிடம் கேட்டுவிட்டு போய் பேசினால் சிறப்பாக இருக்கும். ரேஷனில் கை வைத்தால் கதை முடிந்துடும். எனவே ரேஷனில் தப்பித்தவறி கை வைக்கலாம் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்கள் கதை முடிந்துவிடும்’’ என்றார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழக சட்டசபையில் ரேஷன் அரிசி தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது. அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ‘‘ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அனைவரும் ஆட்டுக்கும், கோழிக்கும்தான் தீவனமாக பயன்படுத்துகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதற்காகத்தான் முதல்வர் சன்னரக நெல்லை உற்பத்தி செய்ய வேண்டும் என்று சொல்லி அதற்கான ஊக்கத்தொகையை உயர்த்தி கொடுத்திருக்கிறார். சன்னரகத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள். அது அண்டை மாநிலத்தில் இருந்து வருகிறது. சன்னரக உற்பத்தி தமிழ்நாட்டில் குறைவு. அதை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் பணிகள் நடக்கின்றன. ரேஷன் அரிசியை சில பேர் பயன்படுத்துவதில்லை’’என்றார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும் போது, ‘‘உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி சாப்பிடுவது கிடையாது. உண்மையை பதிவு செய்கிறோம். நம்ம ஆட்சியில் கொடுக்கும் அரிசி சன்னரக அரிசியாக கொடுப்போம். இனிவரும் காலங்களில் பொது ரக நெல்லுக்கு பதிலாக சன்னரக நெல்லை பயிரிட ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் உயர்த்தியுள்ளோம். இப்போது ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசியில் 90 சதவீதத்தை இட்லி மாவுக்குதான் பயன்படுத்துகிறார்கள். 70 முதல் 80 சதவீதம் ரேஷன் அரிசியை தாய்மார்கள் வீட்டில் சாப்பிடுவதில்லை என்பது தான் உண்மை. இதைத் தான் மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம்’’என்று கூறியிருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal