மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

இங்கு வரும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. கொடைக்கானல் வத்தலகுண்டு சாலை முதல் அப்சர்வேட்டரி சாலை, ஏரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் தற்போது பெரும் இடையூறாகவே இந்த போக்குவரத்து நெரிசல் உள்ளது .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் பிரச்சினையை தீர்க்க மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. போக்குவரத்து கழகத்தின் 7.59 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம், பார்க்கிங் அமைக்க திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

கொடைக்கானலில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 7.59 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் – வணிக வளாகம் +பல அடுக்கு கார் பார்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கரில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வணிக வளாகம் மற்றும் அதற்கு தேவையான பார்க்கிங் வசதி (1.90 + 2.62 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal