நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவுகளும், வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்த கொடூரக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்தன.
இருப்பினும், இந்த இயற்கைப் பேரிடருக்கு மத்தியிலும் நம்பிக்கையளிக்கும் ஒரு அதிசய மீட்புச் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெள்ளத்தில் மற்ற அனைத்துக்கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பச்சை நிறம் பூசப்பட்ட ஒரு வீடு மட்டும் சீறிப்பாய்ந்த சேற்று வெள்ளத்துக்கு நடுவே அசைக்க முடியாமல் நின்ற காட்சி இணையத்தில் தீயாகப் பரவியது.
வெள்ளத்தின் வேகம் சுற்றியிருந்த கட்டிடங்களைத் தரைமட்டமாக்கி அடித்துச் சென்ற போதிலும், அந்தப் பச்சை நிற வீடு மட்டும் வெள்ளத்தின் சீற்றத்தைத் தாங்கி உறுதியுடன் நின்றது. அந்த வீட்டுக்குள் ஒரு குடும்பமே சிக்கியிருந்தது தெரியவந்ததையடுத்து, உலகெங்கிலும் உள்ள சமூக வலைதளப் பயனாளர்கள் அவர்களின் பாதுகாப்புக்காகப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
கட்டிடத்தின் அசாத்தியமான உறுதித்தன்மை இணையத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறியது. இவ்வளவு பெரிய வெள்ளத்தின் சீற்றத்தையும் தாங்கி இந்த வீடு எவ்வாறு சேதமடையாமல் நின்றது? எனப் பலரும் வியப்புத் தெரிவித்தனர்.
இதனிடையே, சமூக வலைதளப் பயனர் ஒருவர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், வீட்டுக்குள் சிக்கியிருந்த குடும்பத்தினர் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி பத்திரமாக மீட்கப்பட்ட செய்தி உறுதி செய்யப்பட்டது.
இது லட்சக்கணக்கான நெட்டிசன்களுக்குப் பெரும் நிம்மதியையும் ஆறுதலையும் அளித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இணையத்தில் கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், “அந்த இக்கட்டான சூழலில் குடும்பத்தினரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? இருப்பினும் இந்தத் தாக்குதலையும் தாங்கி நின்ற அந்த வீடு, தரமான கட்டிட நிர்மாணத்தின் முக்கியத்துவத்துக்குச் சிறந்த சான்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “அந்த வீட்டைப் பலமாக கட்டிய பொறியாளருக்குப் பாராட்டுகள்; கடவுளின் அருளால் குடும்பத்தினர் உயிர் தப்பியது மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார்.
