புதிய நடுவர் மன்றம்… எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு!
தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் மீதான நன்றி உரைக்கு முன்பாக தமிழக முதல்வர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதியன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அடுத்த நாள் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டு, மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான அரசின் சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று ஆளுநர் உரையின் மீதான விவாதமும், நன்றி உரையும் இடம்பெற்றது.
நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி என்.ஆனந்த் மேகதாது விவகாரம் குறித்து பேசுகையில், “காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாடு துளி அளவும் சமரசம் செய்து கொள்ளாது. தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாட்டு முதல்வரின் ஆலோசனைபடி, மேகதாது திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கையும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சிலர் காவிரி தொடர்பான நடுவர் மன்றம் அமைப்பது சரியான நடைமுறை அல்ல என தெரிவித்து வருகின்றனர். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி சென்று காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக, தமிழ்நாட்டில் நியாயமான கவலைகளை குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என பிதமரிடம் வலியுறுத்தியுள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நதிநீர் தாவா சட்டத்தின் படி இத்தகைய குடிநீர் நதிநீர் பிரச்சினையை ஒரு நடுவர் மன்றத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்பது உச்சநீதிமன்றத்தில் நமது வாதமாகும். காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து விட்டது என்று கூறுவது முற்றிலும் தவறானது. மாறாக, எவ்வித கருத்தும் கூறாமல் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடமே திருப்பி அனுப்பி உள்ளது. எனவே ஆபத்து இன்னும் நீங்கவில்லை.
ஒன்றிய அரசும் கர்நாடகாவும் புதிய வழிகாட்டுதலின் கீழ் மேகதாது திட்டத்தை மறைமுகமாக மேற்கொண்டால் நாம் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “எங்களுக்கு வழங்கப்பட்ட வரைவு தீர்மானத்தை மட்டுமே அதிமுக ஆதரிக்கிறது. முன்மொழியப்படாமல், இடையில் சேர்க்கப்பட்ட புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “உரிமைப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்ப எங்களுக்கு அனுமதி மறுகக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை விதியின் கீழ் உரிமைப் பிரச்சினை ஒன்றை அவையின் கவனத்திற்கு கொண்டுவர அதிமுக சார்பில் அனுமதி கோரியிருந்தோம். இதுதொடர்பாக எங்களது கொறடா பேரவைத் தலைவரின் அறையிலேயே கடிதம் வழங்கியிருந்தார். ஆனால், ‘பூஜ்ய நேரத்தில்’ (Zero Hour) அந்த விவகாரத்தை எடுத்துக்கொள்ள பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். எங்களுக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தினாலேயே நாங்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்” என்றும் தெரிவித்தார்.
