சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய், “அப்பாவைக் காணோம்” என்ற குட்டி ஸ்டோரி மூலம் அவர்களின் விமர்சனங்களைச் சம்பந்தமில்லாதவை என எள்ளி நகையாடினார்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் அரங்கேறின. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மின்வெட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, முதலமைச்சர் விஜய் தனது வழக்கமான பாணியில் ஒரு சுவாரசியமான குட்டி ஸ்டோரியைக் கூறினார்.

சட்டமன்றத்தில் த.வெ.க அரசு மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், மாபெரும் தலைவர்கள் அமர்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அவையில், த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறி உரையைத் தொடங்கினார். தன்னை நோக்கி விமர்சனக் கணைகளைத் தொடுத்த எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்த அவர், “திரைத்துறையிலிருந்து நேரடியாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது போலச் சிலர் பேசுகிறார்கள். ஆனால், சினிமா என்பது ரீல்; இது ரியல். நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு எனது உழைப்பு மட்டுமல்ல, தமிழக மக்களின் அளப்பரிய அன்பும் அரவணைப்புமே காரணம்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சாடிய முதலமைச்சர், நமது ஆட்சி என்பது ஒரே ஒரு குடும்பத்தை மட்டும் முன்னிறுத்தும் ஆட்சி அல்ல; மாறாக, தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தையும் அரவணைக்கும் ஆட்சி என்று முழங்கினார். கடந்த 2026 தேர்தலில் மதம், சாதி மற்றும் பண பலத்தால் வாக்குகளைப் பெறும் நச்சு கலாச்சாரத்தை மக்கள் துணையோடு உடைத்தெறிந்துள்ளோம் என்று பெருமிதம் கொண்ட அவர், இது வெறும் ஆரம்பம் தான் என்றும், மக்கள் தங்களுக்கு இன்னும் சற்றே அவகாசம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், மாநிலத்தில் நிலவும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது யார் என்ற கேள்வியை எழுப்பியதோடு, இது மன்னராட்சி அல்ல, மனசாட்சியுடைய மக்களாட்சி என்றும் அழுத்தமாகக் கூறினார்.

இதற்கிடையே, டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்ற முந்தைய ஊழல்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், “டாஸ்மாக் என்பது ஒரு கட்சியின் நிதியாக” மாற்றப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டதும், அவையிலிருந்த திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். சபாநாயகர் தலையிட்டு, முதலமைச்சர் உரை முடிந்ததும் எதிர்க்கட்சியினருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தும், அமளி அடங்கவில்லை.

அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்தனர். “மக்களின் பணத்திலிருந்து ஒரு பைசாவைக் கூட நாங்கள் தொட மாட்டோம்; மற்றவர்களையும் தொட விட மாட்டோம்; மீறித் தொட்டவர்களைச் சும்மா விடவும் மாட்டோம்” என்று முதலமைச்சர் ஆவேசமாகப் பேசியதைத் தொடர்ந்து, திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்த பிறகும், அவையில் தனது பேச்சைத் தொடர்ந்த முதலமைச்சர் விஜய், இறுதியாகத் தனது பாணியில் ஒரு குட்டி ஸ்டோரியைப் பகிர்ந்து கொண்டார். “கடும் வெயிலில் முதியவர் ஒருவர் தனது நெற்றியில் கையை வைத்துக்கொண்டு ஏதோ ஒன்றை தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தார். அதைச் சற்றே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், ‘பெரியவரே, அப்படி என்ன தேடுகிறீர்கள்?’ என்று வினவினான்.

அதற்கு அந்த முதியவர், ‘எங்கப்பா… உங்க அப்பாவைக் காணோம்?’ என்று சம்பந்தமே இல்லாமல் கேட்டாராம்”. இக்கதையைச் சொல்லி முடித்த முதலமைச்சர் விஜய், தற்போதைய எதிர்க்கட்சிகளைப் போலத் தானும் இதுபோன்று சம்பந்தமில்லாத கதைகளைச் சொல்ல முடியும் என்று மறைமுகமாக அவர்களை எள்ளி நகையாடித் தனது உரையை நிறைவு செய்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal