தமிழக சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபோது, அவைக்குள்ளே அமர்ந்திருந்தார் எஸ்.பி. வேலுமணி.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது பற்றி விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

அதிமுக தலைமைக்கு எதிராக மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்துப் பேசினார். பின்னர் ‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்’ என்றார் எஸ்.பி.வேலுமணி. அதன் பிறகு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சபாநாயகருக்கு மீண்டும் ஒரு கடிதத்தைக் கொடுத்தார் எடப்பாடி!

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் தவிர்த்து வந்த எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைக்கு வரும் போதும் கட்சியின் பொதுச்செயலாளருடன் வராமல் தனியாக வந்து சென்றார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் உரிமை மீறல் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யாமல் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியை எடப்பாடி பழனிசாமி தனியாக அழைத்துப் பேசினார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அறையில் இருவரும் 15 நிமிடம் ஆலோசனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணி தரப்பினரை சமாதானப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal