‘‘மத்திய – மாநில உறவுகளை சீர்குலைக்க சதி செய்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்’’ என்ற பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் முன்னாள் பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்.

இது தொடர்பாக ன்னாள் பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதன்மையாக ஒலிக்கப்பட்டதை, பெருமையுடன் ஏற்றுக் கொள்ளாமல், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக வந்தே மாதரம்’ பாடலை இழிவுப்படுத்தி பேசுபவர்கள் மீது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக எதிர் கட்சிகள் முதல் ஆறு மாதங்களுக்கு தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சிக்காமல், அவதூறு பிரச்சாரம் செய்யாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு, தமிழக மக்களின் மகிழ்ச்சிக்கு உரிய ஆலோசனைகள் வழங்க முன் வர வேண்டும். தமிழக முதல்வரான பிறகு, முதல் பிறந்த நாளை கொண்டாடும் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்ற பிறகு ,ஜுன் 18ம் தேதி துவங்கிய முதல் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு ஆளுநர் ரஜேந்திர அர்லேக்கர் அவர்கள் உரையாற்றினார். தேசிய கீதத்திற்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது உலகெங்கும் வாழும் தமிழர்களையும் தேசிய சிந்தனை கொண்டவர்களையும் பெரு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால், எதையும் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய சிலர், இதிலும் தங்களது தேச விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.
எப்போதும், எல்லா பிரச்னைகளிலும் மக்களைப் பிரிக்கும் வகையில் பேசி வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழக சட்டமன்றத்தில் சுமூகமாக முடிந்த தமிழ் தாய் வாழ்த்து பாடல் பிரச்னையை பெரிதாக்கி தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
“தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது விமர்சனத்துக்குரியதல்ல. நம்முடைய நாட்டுப்பண்ணை எத்தனை முறையும் பாடலாம். ஆனால், நாட்டின் ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் “வந்தே மாதரம்” பாடலைப் பாட மறுத்தது தான் வரவேற்க வேண்டிய முக்கிய செயல்’ என்று அவர் கூறியிருக்கிறார். அதுவும் இதை தமிழக அமைச்சர் நிர்மல்குமாரை வைத்துக் கொண்டே கூறியிருக்கிறார். இது தவறான முன்னுதாரணம். கடும் கண்டனத்துக்குரியது.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பல லட்சம் மக்களை கொண்டு வந்து சேர்த்த மந்திரச் சொல் ‘வந்தே மாதரம்’. அதனால்தான் ஆங்கிலேயர்கள், ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சினார்கள். ஆனால் இப்போது, ‘வந்தே மாதரம்’ என்று சொல்லைக் கேட்டு சு. வெங்கடேசன் ஏன் அஞ்சி நடுங்குகிறார் என்பது தெரியவில்லை. ‘வந்தே மாதரம்’ குறித்து சு. வெங்கடேசனின் கருத்து, சுதந்திரப் போராட்ட வீரர்களை நேரடியாக இழிவுபடுத்தும் செயல். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள சு. வெங்கடேசன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தேசிய பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘வந்தே மாதரம்’ பாடலை இழிவுப்படுத்தி பேசுவது கிரிமினல் குற்றம்.
அரசியல் ரீதியாக பாஜகவுக்கு நேர் எதிராக நின்றாலும், மத்திய அரசுடன் இணக்கமான அணுகுமுறையை முதல்வர் ஜோசப் விஜய் பின்பற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். இந்தச் சூழலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன், ‘வந்தே மாதரம்’ பாடலை இழிவுபடுத்தி பேசியிருப்பது, மத்திய – மாநில உறவுகளை சீர்குலைக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தமிழக முதல்வர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள்,நிதி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லி சென்ற போது, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, தமிழக மீனவர்கள் பிரச்னை, தமிழகத்தில் டிஆர்டிஓ (ஞிஸிஞிளி) பாதுகாப்பு மையம் அமைப்பதுஉள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்த பல முக்கிய கோரிக்கைகளை அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார்
தமிழக முதல்வர், பாரத பிரதமரின் இந்த சந்திப்பு, தமிழக வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக, தமிழகத்தின் உட்கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், பாரதத்தின் வலிமைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் இலக்கணமான சந்திப்பாக இது அமைந்தது. அதைத் தொடர்ந்தே தமிழக சட்டமன்றத்தில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படு ஆளுநர் உரை சுமூகமாக நடந்து முடிந்தது. அனைவரது மனமும் குளிர்ந்தது. இது முதல்வர் விஜய்க்கு கிடைத்த வெற்றியாகும்.
மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார், தீரர் சுப்பிரமணிய சிவா, வீரத்திருமகன் வாஞ்சிநாதன் பாடி மகிழ்ந்து தமிழகத்தில் விடுதலை தீயை ஊட்டி வளர்த்த ‘பாரத தாயை வணங்குவோம்’ என்கிற புனிதமான சுதந்திரத்தை பெற்று தந்த தேசபக்தி சுதந்திர பாடலுக்கு தமிழகத்தில் உரிய மரியாதையை முதல்வர் விஜய் அளிக்க வேண்டும்.இந்திய சுதந்திரப் போரில் தேசிய நீரோட்டத்தில் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய தமிழகம் பெருமை கொள்ளும் விதமாக தெளிவாக, தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் சி.பி.எம் பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனின் தேச விரோத, பிரிவினைவாத கருத்துக்களுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். தேசம் முழுவதும் சுதந்திர தாகத்தை விதைத்து,இந்திய தேச விடுதலைக்கு காரணமான “வந்தே மாதரம்” தேசபக்தி பாடலில் அரசியல் செய்யக்கூடாது.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல, தமிழகத்தின், உரிமை சார்ந்த பிரச்னைகளில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்று பிரதமரை நேரில் சந்தித்து தீர்வு காண வேண்டும். இதுபோன்ற நேர்மறை அரசியலை அனைத்து கட்சி தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.
எந்த ஒரு அரசுக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் வேண்டும் எனவே முதல் ஆறு மாதங்களுக்கு தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுவதையும், அவதூறு பரப்புவதையும் விட்டு விட்டு, அரசுக்கு உரிய ஆலோசனைகளை எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும்.
மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தமிழகத்தில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசியல் நாகரிகத்திற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
கடந்த கால ஆட்சிகளில், சுயநல அரசியலுக்காக தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு, அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்கேடுகள் அதிகமாகி, ஊழல் பெருகி, ஆபத்தான கேன்சர் நோய் போல தமிழக வளர்ச்சி பாதிக்கப்பட்டு தமிழ் அன்னையை கடந்த ஆட்சி காலத்தில் படுத்த படுக்கையாக்கிவிட்டனர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அளித்த 14 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி திட்டங்களுக்கும், கணக்கு வழக்கு இல்லாமல், மத்திய அரசு என்ன செய்தது என்று அவதூறு பேசி, நடைபெற்ற நிர்வாக சீர்கேடு காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, கடந்த ஆட்சிக் காலங்களில் முடக்கப்பட்டது.
தமிழக நிதி அமைச்சரின் வெள்ளை அறிக்கை மிகத் தெளிவாக இதை விளக்கி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் வெள்ளை அறிக்கை என்பது தமிழகத்தின் உண்மை நிலையை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் வகையில், தமிழகத்தின் இளம் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மக்கள் மன்றத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
நிச்சயம் தமிழக வெற்றி கழக அரசு, மக்கள் நலம் சார்ந்த புதுமை திட்டங்களை நிறைவேற்றும் வகையில், மிகச் சிறப்பாக தொலைநோக்கு சிந்தனையுடன் சிறப்பாக திட்டமிட்டு, தொடர் முயற்சிகளால், கனிம வளம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் நிதி மேலாண்மையை மேம்படுத்தி, மக்கள் பாதிக்காத வரியில்லாத வருவாயை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டு, தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு இருக்கிறது.
அதற்காக தமிழக அரசும் தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவும் ஆலோசனைகளும் வழங்குவதை விடுத்து, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை தமிழர்கள் மக்களால் அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கொச்சைப்படுத்தி, குறுகிய காலத்தில் ஆட்சியை கவிழ்க்க மறைமுக செயல்களில் ஈடுபடக்கூடாது. தமிழக மக்களின் விருப்பத்துக்கு எதிராக, செயல்படும் சதி அரசியல் திட்டங்களில் ஈடுபடும் கட்சிகள் இனி தமிழக அரசியலில் மக்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்’’ என்று கூறியிருக்கிறார்.
