தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் அறிவித்திருக்கிறார்.
தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் தவெக வில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்.சரவணன் ஏற்பாட்டில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கூட்டரங்கில் வைத்து விஜய் அவர்கள் திரைப்படங்களில் வரும் பாடல்களை தளபதி கச்சேரி என்னும் ஆர்க்கெஸ்ட்ரா நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோபிசன், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா மற்றும் தவெக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பூச்செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
முதல்வர் பிறந்தநாளையொட்டி கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஊனமுற்றோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், ‘‘ நாளை (இன்று) தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். மதுரையை பொறுத்த அளவில் தளபதி கச்சேரி என்னும் நிகழ்ச்சியை அர்ப்பணித்து உள்ளோம் இந்த கச்சேரியை பார்க்க வரும் அனைவருக்கும் பூஞ்செடிகள் மரக்கன்றுகளை கொடுத்து விஜய் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம். நாளை (22ம் தேதி) முதல் தொடர்ந்து ரத்ததான முகாம், மருத்துவ முகாம், அன்னதானம் என விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சியாக நடத்த உள்ளோம்.

இந்த வாரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தங்க மோதிரம் வழங்க இருக்கிறோம். நாளையும் (22ம் தேதி) தொடர்ந்து சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பாகவும், விஜயின் வின்ட் ஸ்கிரீன் (டிஸ்ட்ரிபியுட்டர்) சார்பாகவும் தொடர்ந்து ஒருவார காலத்திற்கு விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் ஜென்சி புரட்சியை உருவாக்கி இருக்கிறார் முதல்வர் அவர்கள். சாதி மதம் பணம் கடந்து ஒரு அரசியலை கொண்டு வந்திருக்கிறார். சமூகப் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் ஊழலை ஒழித்து இப்போதே ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளார் இன்னும் 10 & 20 ஆண்டுகளில் தளபதி விஜய் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அவருக்கு நாம் அத்தனை பேரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
கட்சி ஆரம்பித்து இரண்டு வருடத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு செயல்பட்டு இருக்கிறார் முதல்வர் அவர்கள். இதற்கும் அவர் வழிமுறை வைத்திருப்பார். முதல்வர் விஜய் அவர்கள் எம்ஜிஆரை பாலோ அப் பண்ணி நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். எம்ஜிஆரின் காலத்தில் எம்.எல்.சி இருந்தது. இப்ப மக்கள் எல்லாம் என்ன சொல்றாங்கன்னா எம்எல்ஏக்கள் எல்லாம் புதுசா வந்திருக்காங்க அனுபவம் இல்லை அப்படின்னு சொல்றாங்க. அதனால எம்எல்சி என்ற பதவியை கொண்டு வர பொதுச்செயலாளர் ஆனந்த் அண்ணன் அவர்களிடமும் அமைச்சர் ஆதாவ்அர்ஜுன் அவர்களிடமும் எடுத்து கூறியுள்ளோம்.
அப்படி கொடுத்தோம் என்றால் இந்த கட்சியில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் அனுபவத்தை எம்எல்ஏக்களுக்கு சொல்லித் தருவார்கள். அண்ணா அவர்கள் எம்எல்சி யில் இருந்து தான் முதல்வராக பொறுப்பேற்றார்கள். கண்டிப்பாக அவர்கள் முதல்வர் அவர்களிடம் இது குறித்து எடுத்து கூறுவார்கள்’’ என்றார்.
