அ.தி.மு.க. ஆட்சியமைக்க தி.மு.க. ஆதரவு கொடுக்கிறது என்று நேற்று செய்திகள் வெளியான நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, கனிமொழி, பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் திருமாவளவன், சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்தனர்.

ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தவிர, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாகவும் ஸ்டாலின் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் பேசினாராம்.

நாளை நடக்கும் எங்கள் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில், இது (அதிமுக ஆதரவு) தொடர்பாகவும் ஆலோசித்து முடிவெடுக்கிறோம் என்று மூன்று கட்சிகளும் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்கள். இதற்கிடையே விஜய்க்கு ஆதவு கொடுப்பது தொடர்பாக ‘நிதானித்து’, கட்சியின் எதிர்காலம் கூட்டணி குறித்தெல்லாம் யோசித்துதான் முடிவெடுக்க முடியும் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.

தி.மு.க. அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றிய கேள்விக்கு, ‘இது குறித்தும் நாளை நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்’ என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் விஜய்யால் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், இன்னும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டாம். அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்போம் என்ற முடிவுக்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் வரலாம் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal