முதல்வர் விஜய் சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்த நிலையில், தி.மு.க. தரப்பிலும் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் செய்தி மக்கள் தொடர்பு துறையை அரசியல் பிரச்சாரத்திற்கு விஜய் பயன்படுத்துவதாகவும், இதற்கு அவரது தனிப்பட்ட செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தி.மு.க. எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்திருக்கிறார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான வில்சன், “முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களே, TNDIPRNEWS-ஐ உங்கள் தனிப்பட்ட மக்கள் தொடர்பு நிறுவனமாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். மேலும் இது தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன், “தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) என்பது ஒரு அரசுத் துறையாகும். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் உரைகளைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவது இத்துறையின் பணியின் ஒரு பகுதியாக இருந்தாலும், அத்துடன் சேர்க்கப்படும் வாசகங்கள் எதிர்க்கட்சியினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான அரசியல் தாக்குதல்களாக அமைந்துள்ளன.

ஒரு அரசுத் துறை இத்தகைய அரசியல் ரீதியான கருத்துகளை வெளியிடுவது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும்; இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. கட்சிக்கும் அரசுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. புதிய முதலமைச்சரை மகிழ்விக்கும் ஆர்வத்தில், அதிகாரிகள் இந்த எல்லையை மங்கச் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களே, TNDIPRNEWS-ஐ உங்கள் தனிப்பட்ட மக்கள் தொடர்பு நிறுவனமாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். முதலமைச்சர் அலுவலகத்தில் (CMO) ஜெகதீஷ் பழனிசாமி உங்கள் தனிப்பட்ட செயலாளராக இருப்பதன் விளைவுதானா இது?

DIPR பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது; எனவே, இத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்காதீர்கள். இது தொடர்ந்தால் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்; இதற்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூற வைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal