ஏற்கனவே, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அறிவிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் தொடங்கப்படாமல் இருந்த ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்த் துறையில் விடப்பட்டுள்ள டெண்டரும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்திற்காக 500 மின்சார பேருந்துகளை வாங்கவும், அதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது. அதன்படி, ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சார பேருந்துகள் வாங்க கடந்த திமுக ஆட்சியில் சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஆட்சியில் கோரப்பட்ட இந்த டெண்டரை தவெக அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்களே பேருந்துகளை வாங்கி, இயக்கி, பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு நிலையான கட்டணத்தை மட்டுமே செலுத்தும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி இழப்பை ஏற்படுத்தக் கூடியவை எனக் கண்டறிப்பட்டதால் திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மின்சார பேருந்துகளை வாங்குவதற்கும், அதற்கான நடத்துநர்களை நியமித்து பராமரிப்பதற்கும் போதிய நிதியில்லை என்பதால் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 246 கோடி மதிப்பிலான பணிகளை அரசு ரத்து செய்திருந்தது. அதேபோல, பல்வேறு துறைகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
