நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ வியக்கத்தக்க வகையில் 108 தொகுதிகளில் வெற்றி வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அ.தி.மு.க. நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. இந்நிலையில், இன்று சென்னை – பனையூரில் உள்ள அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை அக்கட்சி தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது, ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெறச் செய்த தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன.
ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள், நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள். நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் – & வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர்.
இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், விர்ச்சுவல் வாரியர்ஸ் என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் நேற்று (5ம் தேதி) விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் அறிக்கை வெளியானது. காங்கிரஸ் கட்சியினரோ, ‘த.வெ.க. எங்களிடம் ஆதரவு கேட்டிருக்கிறார்கள்’ என்று ஓபனாக பேசினார்கள். த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கிறதா? அல்லது த.வெ.க.வுக்கு யார் ஆதரவு கொடுத்தா¢ 5 ஆண்டுகள் எந்த சிக்கலும் இல்லாமல் விஜய் முதல்வர் பதவியை தொடர முடியும் என்பது உள்பட பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் ‘ஆட்சியில் பங்கு’ என்று ஓபனாக அழைப்பு விடுத்தார். அப்போது, ‘விஜய் இப்படி ஓபனாக அழைப்பு விடுத்தது தவறு’ என்று வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். ஆனால், த.வெ.க. கூட்டணிக்கு அழைத்தும் திருமா போகவில்லை. தி.மு.க.விற்கு ‘ஜால்ரா’ போட்டுக்கொண்டிருந்த திருமாவளவன், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் தற்போது த.வெ.க. பக்கம் போனால் ‘அதிகாரம்’ கிடைக்கும் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதற்கான காய்களையும் நகர்த்தி வருகிறார்கள்.
அதே சமயம், காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுவிட்டு விஜய்க்கு ஆதரவு கொடுத்து ஆட்சியில் பங்கு கேட்க முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் 5, விசிக 2, கம்யூனிஸ்டுகள் 2+2 என இருக்கிறது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரவு கொடுத்தால்தான் விஜய்க்கு 218 அல்லது 220 கிடைக்கும். இப்படி துல்லிய மெஜாரிட்டியில் விஜய் முதல்வராக பதவியேற்றால், அவரது முதல்வர் பதவிக்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம். ஏனென்றால் ஒவ்வொரு கட்சியும் சரி, அந்த எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கான ‘லாபத்தை’ எதிர்பார்த்து பிரச்னையை கிளப்புவார்கள்.
ஆனால், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தவிர, 47 இடங்களில் தனித்து வெற்றி பெற்றிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் ஆதரவு கொடுத்தால் 5 ஆண்டுகாலம் ஆட்சியை வழிநடத்த முடியும் சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றால், அது விஜய்க்குத்தான் பேராபத்தாக முடியும்.
தவிர, விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் மத்திய அரசின் ஆதரவு நிச்சயம் தேவை. ஒரு மாநிலக் கட்சி மத்திய அரசை எதிர்த்துக் கொண்டு மாநிலத்தை வழிநடத்திச் செல்ல முடியாது என்ற யதார்த்தத்தை விஜய்யும் உணராதவரல்ல. எனவே, கொள்கை வேறு… மக்கள் நலன் வேறு… என்கிற ரீதியில் கூட்டணி அமையலாம். தவிர, அ.தி.மு.க. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம். இதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது’’ என்றனர்.
அரசியலில் நிரந்திர எதிரியும் இல்லை… நிரந்திர நண்பனும் இல்லை… என்பதை விஜய்யும் விரைவில் நிரூபிப்பார்!
