தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 2 கோடிக்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தா.வேலுவின் தனி உதயவியாளராக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவரது வீட்டில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறை அதிகாரிகள் சத்திய மூர்த்தியின் இல்லத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ரூ.2 கோடிக்கும் மேல் பணம் இருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் பணத்தை எண்ணுவதற்கான பிரத்யோக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.
இது தவிர, வாக்காளர் பட்டியல், சில முக்கிய டைரிகள், ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று காலை ரூ.2 கோடிக்கும் அதிகமாக தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கமான வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
