தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ‘குட்டி கதை’ சொன்ன விவகாரம்தான் தி.மு.க.வினரை கொந்தளிக்க வைத்தது.
அண்ணா அறிவாலயத்தில் அன்றைய தினமே ஆர்.எஸ்.பாரதி முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அடுத்தது ஆ.ராசா உள்பட பலர் கடுமையாக எச்சரித்த நிலையில்தான், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ‘‘அனைவருக்கும் வணக்கம்… இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குகள் சேகரித்த போது சிறு குழந்தைகளைப் பார்த்து, ‘நீங்கள் உங்களுடைய தாத்தா & பாட்டி, அம்மா, அப்பா ஆகியோரிடம் விஜி மாமாவுக்கு ஓட்டுப் போடச் சொல்லவேண்டும்…. உங்க விஜி மாமாவுக்கு ஓட்டுப்போடச் சொல்லுங்கள்’ என்று சொன்னார்.

அதே போல் அவர்களும் ஓட்டுப்போட்டு விட்டார்கள். ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்தது. ஆனால், த.வெ.க. ஆட்சியமைத்ததில் இருந்து தமிழக அரசியல் களம் மிகவும் தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதற்குமேல் அதற்குள் செல்லவும், அதுபற்றி பேசவும் விரும்பவில்லை.
ஒரே ஒரு விஷயம்தான். எங்களுக்கு வழிகாட்டி பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இவர்ளுடைய மொத்த வடிவமாக இருக்கின்ற எங்களுடைய கழகத் தலைவர் அன்பு அண்ணன் ஸ்டாலின் அவர்கள். நான் தற்போது இரண்டு விஷயங்களை கூற கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தடவை அறிஞர் அண்ணாவைப் பார்த்து “Your days are numbered” ‘உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன’என்று கூறியபோது, நெஞ்சை நிமிர்த்தி ‘My steps are measured ’ என்று சொன்னார்.
அதே மாதிரி எங்களுடைய தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில், ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ என்றார். இந்த இருவரின் கலவைதான், பொறுமைக்கு பெருமை சேர்த்து, அரசியல் நாகரீகத்தை கடைபிடித்துக்கொண்டு இருப்பவர்தான் எங்கள் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
விஜி மாமா எனும் தமிழக முதல்வர் அவர்களே… இந்தக் குழந்தைகளுக்கு நல்ல தாய் மாமனாக இருங்கள்! உங்கள் தாய்க்கு ஒரு நல்ல மகனாக இருங்கள்! இதுவே எங்களுடைய வேண்டுகோள்! அண்ணா வழியில் நாங்கள் சொல்லவேண்டிய ஒரே ஒரு விஷயம்… நீங்கள் ஆங்கிலத்தில் தானே நிறைய பேசுகிறீர்கள்… திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த நாங்கள் our steps are measured. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது mind your steps! மாண்புமிகு முதல்வர் விஜி மாமா அவர்களே..!’’ என எச்சரிக்கை பதிவை பதிவிட்டிருக்கிறார்.
