சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மாநிலத்தின் அதிகார மையமாகத் திகழும் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் அமலாக்கத்துறை, இந்தியன் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான ஆவணங்களை எடுத்து கொடுக்கும் வகையில் அமைச்சரின் உதவியாளர்கள் அறையில் இருக்கின்றனர்.

தற்போது அமைச்சரின் அறையை உள்தாழிட்டு கொண்டு சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையை அடுத்து தனக்கு இருந்த நிகழ்ச்சிகளை அவசரமாக முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தலைமைச் செயலகத்தில் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்கள் சோதனை மேற்கொள்வது இரண்டாவது முறையாகும். கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைந்து சோதனை செய்வது இதுவே முதல்முறை. இதனால் அறிவாலயம் அதிர்ந்து போய் கிடக்கிறது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal