செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்யப்போவதாக முதலில் யாரிடம் சொன்னார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக் வீட்டில் நேற்றைய தினம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது.

இந்த நிலையில் 17 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்து வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்வதாகவும் தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருமாறும் அழைத்தனர். ஆனால் அதற்குள் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே ஐயோ, என நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறினார். பிறகு அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ரகுபதி, கே.என். நேரு உள்ளிட்டோர் நேரில் போய் சந்தித்தனர். செந்தில் பாலாஜியின் காது பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அவர் சுயநினைவில்லாமல் இருக்கிறார் என்றும் நான்கைந்து முறை அழைத்தும் அவர் கண்களை திறக்கவில்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அங்கிருந்தபடியே அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்தது என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை நடத்திவிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரை கைது செய்வதாகவும் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த தகவலை முதலில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கிடம்தான் அமலாக்கத் துறையினர் தெரிவித்தனராம். இதன் பிறகுதான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal