சென்னையில் நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி கர்ஜித்திருக்கிறார். காரணம், மா.செ.க்களும் அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை வீசியிருக்கின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இன்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மீது அவதூறு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி வாசித்தார். அவர் கூறுகையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை அவதூறு பரப்பியுள்ளார். ஜெயலலிதா பற்றி எந்த விதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாமல் அண்ணாமலை பேசியுள்ளார். அவருடைய இந்த பேட்டி அதிமுக தொண்டர்கள், மக்களின் மனதை காயப்படுத்தி கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்திவிட்டது.

1998 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. பாஜக மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் ஜெயலலிதா மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜெயலலிதா மீது மதிப்பு இருந்தது. சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் பிரதமர் மோடி நிறைய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். அப்படிப்பட்ட உன்னத தலைவியை பொது வெளியில் அவதூறாக அண்ணாமலை பேசியதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக 20 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்த நிலையில் அக்கட்சிக்கு 4 எம்எல்ஏக்களை பெற்றுத் தந்தவர் எடப்பாடி பழனிசாமி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் காலை முதலே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு வந்த அதிமுக மூத்த நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிராக கொந்தளித்தனர். நேற்றைய தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, அண்ணாமலை இதற்கு மேல் பேசினால் வாங்கிக் கட்டிக் கொள்வார். கொஞ்சம் கூட வரலாறும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை. அவர் தலைமை பதவிக்கே தகுதியில்லாதவர். அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. மறைந்த தலைவர் குறித்து பொதுவெளியில் அவதூறு பரப்பினால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். இப்படியே போனால் பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வோம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கூட்டணி குறித்து மறுபரிசீலனை என்பது குறித்து செய்தியாளர் ஒருவர் இது உங்கள் சொந்த கருத்தா இல்லை கட்சியின் கருத்தா என கேள்வி எழுப்பினார்.

தற்கு ஜெயக்குமாரோ நான் எப்போதும் தனிப்பட்ட கருத்துகளை பேசியதில்லை. கட்சியின் கருத்தைதான் பேசினேன் என்றார். இந்த நிலையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பலர் பாஜக கூட்டணி வேண்டாம் என முழக்கமிட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்து பாஜக தலைமை ஓரிரு நாட்களில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கிறோம். பாஜக தலைமை முடிவெடுக்காவிட்டால் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வோம் என பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த விஷயத்தில் அதிமுக எதிர்பார்ப்பது இரு விஷயங்கள்தான். ஒன்று அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்வது, அவருக்கு பதிலாக அதிமுகவுடன் ஒத்து போகும் நபரை தலைவராக நியமிப்பது. மற்றொன்று- இனியும் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என கட்சி தலைமை அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதுதான் அதிமுக எதிர்பார்ப்பது என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal