தமிழகத்தில் தி.மு.க.வுடன் பா.ஜ.க.வை கூட்டணி வைக்க அண்ணாமலை முயற்சிக்கிறார் என அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் குண்டைத் தூக்கி போட்டிருக்கிறார்!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்து வருகிறார். தற்போது அதிமுகவையும் விமர்சித்து வருகிறார். ஆனால் அவரை அவரது சொந்த கட்சியினரே விமர்சிக்கும் நிலை எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மறைமுகமாக அண்ணாமலையை விமர்சித்து வந்த எஸ்.வி.சேகர் தற்போது நேரடியாகவே விமர்சித்து வருகிறார். ட்விட்டர் ஸ்பேஸில் அண்ணாமலைக்கு எதிரானவர்களை ஒன்று திரட்டி பேசி வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு இரு பக்கமும் “அடி” என்பதை போல் அதிமுக, திமுக, சொந்த கட்சியினரின் தாக்குதலுக்குள்ளாகி வருகிறார். இவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் ஊழலை பொருத்தமட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதில் தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்துள்ளன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதில் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் அண்ணாமலைக்கு எதிராக அதிரடியாக பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் காவல் நிலையத்தில் திருடர்களுடன் பழகியவர் அண்ணாமலை. அவர் மோடி, அமித்ஷாவை விட தான்தான் பெரியவர் என கருதுகிறார். தன்னை விட பெரியவர் யாரும் இல்லை என்றும் எண்ணுகிறார்.
பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார். பாஜக மாநில தலைவராக இருந்து எம்எல்ஏவாக கூட ஜெயிக்க முடியவில்லை. இதில் அவர் பின்னால் 25 எம்பிக்கள் இருப்பார்கள் என நினைக்கிறார். அவரால் 25 எம்பிக்கள் முன் நின்று போட்டோ மட்டுமே எடுக்க முடியும். அண்ணாமலை முயற்சியால் 100 ஓட்டுகள் கூட பாஜகவுக்கு கிடைக்காது.
2 மாதத்தில் அண்ணாமலை எங்கே போவார் என தெரியவரும். அவர் சிறைக்கு செல்வாரா இல்லை கட்சியை விட்டு செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே பல பேட்டிகளில் அண்ணாமலை விரைவில் பதவிநீக்கம் செய்யப்படுவார் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணாமலைக்கு பதில் வானதி சீனிவாசன், கல்யாண ராமன், ஆர்எஸ்எஸ் நல்லகண்ணு, நயினார் நாகேந்திரன் ஆகிய 4 பேரில் யாராவது ஒருவர் தமிழக பாஜக தலைவராக வருவார் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் அவர் வேறு கட்சியை தொடங்கும் அளவுக்கு பணம் இருப்பதாகவே எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.