அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம் காலை 10.30 மணிக்குத் தொடங்க உள்ளது.

ஈபிஎஸ் தலைமை வகிக்கும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தின்போது கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த ஆண்டு வரவிவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரமான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளன. அதிமுகவும் இந்தக் கூட்டத்தில் அதைப்பற்றி ஆலோசனை நடத்தப்போகிறது. தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரமாக செயல்படுத்த கட்சித் தலைமை தீர்மானத்திருக்கிறது.

முக்கியமாக எந்தெந்த தேர்தல் பணிகளை முன்னெடுப்பது என்பதை எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சியின் நிர்வாகிகளுடன் விவாதிக்க இருக்கிறார். இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின், அதிமுகவின் முன்னணி தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்ககள் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை விமர்சித்துக் கூறியுள்ளார். இதற்கு எதிர்வினை ஆற்றிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக தலைமை சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் கோரியுள்ளார்.

இதனால் பாஜக – அதிமுக கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ளது. இச்சூழலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal