தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து சென்ற அடுத்த நாளே அரசியல் மேகங்கள் விறுவிறுவென மாறிவருகின்றன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும், அ.தி.மு.க.வையும் அண்ணாமலை விமர்சித்த விவகாரம்தான் அ.தி.மு.க.வினரை கொதிப்படைய வைத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை..!’ என்று அதிரடியாக பேசி அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு வருவதை உணர்த்திவிட்டார். இந்த நிலையில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி முடிவுக்கு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது பற்றி தமிழக அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக வந்த பிறகு அதிரடியாக பேசி பா.ஜ.க.வின் இருப்பை தொடர்ந்து காட்டி வந்தார். இதனால், தமிழக பி.ஜே.பி. வளர்ந்ததா? என்றால் கிடையாது. அண்ணாமலை என்ற தனி மனிதரின் பிம்பம்தான் உயர்ந்தது.

ஏற்கனவே, கர்நாடக மாநிலத் தேர்தலில், பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்த மூத்த தலைவர்களையும், அவர்களது வாரிசுகளையும் புறக்கணித்து, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று காங்கிரஸை அமோகமாக வெற்றியடைய வைத்துவிட்டார் அண்ணாமலை. இந்த நிலைமையைதான் தற்போது, தமிழகத்திலும் ஏற்படுத்தி வருகிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, ஆளுங்கட்சியையும், எதிர்க்கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறாரே தவிர, பா.ஜ.க.வை எப்படி வளர்ப்பது, கிளைக்கழகங்களுக்கு நிர்வாகிகளை நியமிப்பது என எதிலும் கவனம் கொள்ளவில்லை. ஆனால், ‘ஆடியோ வீடியோ அரசியல்’ கலாச்சாரத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்திவிட்டார். இதனால் எந்த பலனும் இல்லை!

தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியும் வெற்றிபெறாது என்பது சிறு குழந்தைக்குக்கூட தெரியும். காரணம், இங்கு சிறுபான்மையின வாக்குகள் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. அப்படியிருந்தும், அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கிறது என்றால் அக்கட்சியின் பெருந்தன்மையை அண்ணாமலை உணரவேண்டும்.

அதைவிடுத்து, கூட்டணியில் இருந்து கொண்டே அ.தி.மு.க.வை விமர்சனம் செய்து வந்தால், அவர்களிடம் அதிக இடங்களை பெற முடியும் என அண்ணாமலை தப்புக் கணக்குப் போடுகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமம் என அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, இந்த விமர்சனத்தைக் காரணமாக வைத்து, கூட்டணியிலிருந்து விலகிவிடலாம் என எடப்பாடியார் தரப்பு முடிவெடுத்துவிட்டது’’ என்றனர்.

அப்பாடியானால், அ.தி.மு.க. யாருடன் கூட்டணி வைக்கும் என்று ‘அரசியல் வியூக நிபுணர்கள்’ சிலரிடம் பேசியபோது, அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

அதாவது, ‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் வியூக பொறுப்பாளராக இருந்தவர் சுனில்! பத்தாண்டுகளாக ஆட்சியிலிருந்தும்… ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை மறைந்தும்… எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கத் தலைவர் பதவியில் அமர வைக்க வியூகம் வகுத்துக் கொடுத்தவர் சுனில். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற வியூகம் வகுத்துக் கொடுத்தவர் சுனில்! இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி இவரிடம் தான் தற்போதும் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார். அந்த வகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டாலே 20 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி. தவிர, காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று எடப்பாடிக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் சுனில்!

ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வை கழற்றி விட்டால், அ.தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறுவது உறுதி. எனவே, மத்தியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நிலைமைகள் தலைகீழாக மாறும்! எடப்பாடி பழனிசாமியின் வியூகமே தனி! அது தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal