பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இடம் பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

அண்ணாமலை விமர்சனம் தொடர்ந்தால் கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

‘‘அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசுகிறார். இதற்கு முன்பாக இருந்தவர்கள் மாநில தலைமை என்ற தகுதிக்கு உரியவர்களாக இருந்தார்கள்.

ஆனால் மாநில தலைவருக்கான தகுதி அண்ணாமலைக்கு இல்லை. திமுகவை விமர்சிப்பதை விட்டு தோழமை கட்சியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலையின் பேச்சு வன்மையாக கண்டித்தக்கது. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக கூட்டணி தொடரக்கூடாது, பிரதமராக மோடி வரக்கூடாது என்ற நிலையில் அண்ணாமலை போகிறாரா? என்று தான் தெரிகிறது.

இப்போது இருக்கும் சூழலில் கூட்டணி வைத்தால் கூட அதிமுக 30 இடங்களை கைப்பற்றும். 8 மாதம் இருக்கும் நிலையில் திமுக அரசு மீது மேலும் அதிருப்தி ஏற்பட்டு 40 இடங்களையும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நிலை இருக்கும் போது வேண்டும் என்றே வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை உடைக்கும் செயலாக அண்னாமலையின் செயல்பாடு உள்ளது. இவரது எண்ணம் தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு சீட் வரக்கூடாது.

பிரதமராக மோடி வரக்கூடாது என்பதுதான் இவரது செயல்பாடு உள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலாக உள்ளது. அண்ணாமலை கர்நாடகா போனாரே வெற்றி பெற்றார்களா? கர்நாடகாவில் 40 சதவீத ஊழல் பற்றி பேசுங்கள். மறைந்த தலைவர் பற்றி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 20 வருஷத்திற்கு பிறகு பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருப்பதற்கு அதிமுகதான் காரணம்.

அதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா? தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்தால்தான் பாஜகவுக்கு ஒரு அடையாளம் இருக்கும். அந்த அடிப்படையான விஷயத்தை மறந்து இப்படி கூட்டணியை முறிக்கிற செயலாக அண்ணாமலை செயல்படுவதை அமித்ஷாவும் நட்டாவும் கண்டிக்க வேண்டும். கூட்டணி குறித்து நான் சொல்ல தேவையில்லை. உரிய நேரத்தில் கட்சி முடிவு செய்யும்.

அண்ணாமலையின் இந்த பேச்சு எங்கள் கட்சியை விமர்சனம் செய்யும் வகையில் தொடர்ந்தால் கூட்டணி குறித்து நாங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டிய சூழலுக்கு எங்களை அகில இந்திய தலைவர்கள் தள்ள மாட்டாரகள். அண்ணாமலையின் பேச்சால் 2 கோடி தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். அண்ணாமலை முதிர்ச்சி இல்லாமல் தன்னை முன்னிலைப்படுத்த வெண்டும் என்று இதுபோல கருத்துக்கள் வருவதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டியது டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களின் கடமையாக இருக்கும்’’இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. & பா.ஜ.க. இடையே நடக்கும் கருத்துமோதல் குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், கூட்டணியில் இருந்து கொண்டே அ.தி.மு.க.வை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் அண்ணாமலை! ஏற்கனவே, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் புதுமையை புகுத்துகிறேன் என்று கூறி, அங்கு பா.ஜ.க.வை காலி செய்துவிட்டார். தற்போது, தமிழகத்திலும் பா.ஜ.க.வை காலி செய்ய காத்திருக்கிறார்.

காரணம், அரசியலில் நெளிவு, சுழிவு தேவை. இது அண்ணாமலைக்கு கொஞ்சமும் கிடையாது. இதே மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாது இருந்தால் இப்படி பேசுவாரா? செயல்படுவாரா? ஏற்கனவே, பா.ஜ.க.வை எப்படி கழற்றி விடுவதென்று எடப்பாடி பழனிசாமி யோசித்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கான காரணத்தை அண்ணாமலையே உருவாக்கி கொடுத்துவிட்டார்’’ என்றனர்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 9 இடங்களில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் சீட் கேட்கிறது. ஒரு கிராமத்திலாவது பா.ஜ.க.விற்கு கிளைச் செயலாளர் இருக்கிறாரா என்பதை அண்ணாமலையும், அமித் ஷாவும் யோசிக்கத் தவறியது ஏனோ?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal