திராவிட மண்ணில் ‘மின்வெட்டு, டாஸ்மாக்’ அரசியல் எடுபடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி சீறியிருக்கிறார்.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.7 கோடி மதிப்பில் புனரமைத்தல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முதலமைச்சர் ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கினார். தற்போது அந்த நிதியின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நிறைவுற்று அவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று ரூ.71 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வை பொருத்தவரை தமிழக அரசு மிக தெளிவான விளக்கம் கொடுத்து விட்டது. அதன்படி வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. மேலும் விசைத்தறி, கைத்தறி, விவசாயத்திற்கு வழங்கப்பட்டும் வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தில் மட்டுமே சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தையும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மாற்றம் செய்துள்ளது. மின்வெட்டு தொடர்பாக ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். நான் கேட்கிறேன் ஓ.பி.எஸ். வீட்டில் மின் தடை ஏற்பட்டதா? அல்லது அவரது தோட்டத்தில் மின் தடை ஏற்பட்டதா?

தமிழகத்தில் எங்குமே மின் தடை என்பது இல்லை. சீராக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ் தானும் இருக்கிறேன் என்பதை காட்டி கொள்வதற்காகவே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அரசியலுக்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழகத்தில் மின்தடை உள்ளது என குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் அமித் ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை என்பது எதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வு. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது. எனவே எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மறந்து எதை வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என நினைப்பவர்களின் எண்ணம் திராவிட மண்ணில் எடுபடாது.

பா.ம.க தலைவர் அன்புமணி, மது விற்பனையில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். தமிழகத்தில் ஆண்டிற்கே ரூ.45 ஆயிரம் கோடிக்கு தான் மது விற்பனை நடக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட் வாங்குவதற்காகவே சில கருத்துக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் கிடையாது. இப்படி அறிக்கை விடுபவர்கள் மக்கள் நலன் சார்ந்த குற்றச்சாட்டுகளை வைத்தால் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.

மற்றபடி அரசியலுக்காக சொல்லப்படும் கருத்துகளை யாரும் பொருட்படுத்த தேவையில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வரவில்லை. வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சோதனை நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் கொடுத்துள்ளனர். கூடுதல் ஆவணங்கள் கேட்டாலும் அவர்கள் சமர்ப்பிக்க தயாராக உள்ளார்கள்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal