மத்திய உள்துறை அமித் ஷா தமிழகம் வந்து சென்றுள்ளார். அவரது பயணம் பாஜக நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதே உற்சாகத்துடன் அடுத்தக்கட்ட பணிகளை அக்கட்சியினர் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்த நிலையில், மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்று பிரதமராக மோடி பொறுப்பேற்பார் என அமித் ஷா சூளுரைத்துள்ளார். ஆனால், கடந்த தேர்தல்கள் போன்று எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தல் பாஜகவுக்கு எளிதாக இருக்காது எனவும், சவால் நிறைந்ததாக இருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். பொதுவாக ஒரேஆட்சி மீது மக்களுக்கு இயல்பாக ஏற்படும் அதிருப்தி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது உள்ளிட்டவைகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். ஓரணியில் இணைந்தால்தான் பலமிக்க பாஜகவை வீழ்த்த முடியும் என்பதால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் கூடும் கூட்டம் வருகிற 23ஆம் தேதி பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ளது, தனக்கு எதிராக நடந்து வரும் காட்சிகளை பாஜகவும் உண்ணிப்பாக கவனித்து வருகிறது. அதனால்தான் கூடுமான அளவுக்கு தங்களது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கட்சிகளை இணைக்க அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என அமித் ஷா விரும்புவதாக தெரிகிறது. அனைத்து பிரிவையும் ஒன்றிணைத்த அதிமுக, பாமக, தேமுதிக, தமாக மற்றும் சில சிறிய கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமித் ஷா,‘‘ 25 தொகுதிகளை வெற்றி இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்’’ என கூறியுள்ளார். இதன்மூலம், தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் 25 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிட பாஜக ஆயத்தமாகி வருவதாக கூறுகிறார்கள்.

அதன்படி, வேலூர், தென் சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், கோவை, திருப்பத்தூர், நீலகிரி, விழுப்புரம் ஆகிய 9 மக்களவை தொகுதிகளை அதிமுக கூட்டணியில் பெற்றுவிட அக்கட்சியின் தலைமை முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது. இவை அனைத்துமே பாஜகவுக்கு வாக்கு வங்கி இருக்கும் அல்லது கூட்டணி கட்சிகளுக்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ள இடங்களே.

தென் சென்னை, கோவை ஆகிய தொகுதிகளை பொறுத்தவரை கடந்த காலங்களில் பாஜக தனித்து போட்டியிட்டே சுமார் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றுள்ளது. தென் சென்னைக்குட்பட்ட பகுதிகளில் பிராமண சமூகத்தினரின் வாக்குகளும், கோவையில் கவுண்டர் சமூகத்தினரின் வாக்குகளும் அதிகம். இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஏற்கனவே வாக்கு வங்கி உள்ளது. அதேபோல், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணன் அந்த தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்துள்ளார். விருதுநகரை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு கணிசமாக செல்வாக்கு இருப்பதால், இரண்டு தேசிய கட்சிகளும் நேரடியாக களத்தில் மோத வாய்ப்புள்ளது.

ஆனால், திருநெல்வேலி அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. எனவே, அதனை அதிமுக விட்டுக் கொடுக்குமா என்பது சந்தேகமே. எனவே, தென்காசி மக்களவை தொகுதியை பாஜக கேட்டுபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தென்காசி மக்களவை தொகுதி ரிசர்வ் தொகுதி. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் 44.69 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை புதிய தமிழகம் கட்சி பிடித்தது. அக்கட்சியின் கிருஷ்ணசாமி 33.40 சதவீத வாக்குகளை பெற்றார். எனவே, கூட்டணியில் புதிய தமிழகம் இருக்கும் பட்சத்தில் பாஜகவுக்கு அந்த தொகுதி கைகொடுக்கலாம். ஆனால், அந்த தொகுதியை புதிய தமிழகம் விட்டுக் கொடுக்குமா என்பது சந்தேகமே.

வேலூர் தொகுதியை பாஜக குறி வைத்துள்ளதாக தெரிகிறது. அதனால்தான் மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை அக்கட்சி வேலூரில் நடத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இவர் அதிமுக கூட்டணியில் ஏற்கனவே வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறை ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அமித் ஷாவை நேற்றிரவு சந்தித்து பேசினார் என்பது கவனிக்கத்தக்கது. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் பிரிந்துள்ளதால், திருப்பத்தூர் மக்களவை தொகுதி மீதும் பாஜக கண் வைத்துள்ளதாக தெரிகிறது.

தனித் தொகுதியான நீலகிரி காங்கிரஸ் கோட்டையாக ஒருகாலத்தில் இருந்தது. பாஜகவும் இங்கு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று தேர்தல்களில் இரண்டு முறை திமுகவும், ஒரு முறை அதிமுகவும் இங்கு வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக ஆ.ராசா உள்ளார். எனவே, இந்த தொகுதியை பாஜகவுக்கு அதிமுக விட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளது. விழுப்புரம் தொகுதியில் பாமகவுக்கு வாக்கு வங்கி கணிசமாக இருப்பதால், கூட்டணியில் பாமகவை கொண்டு வந்து அந்த தொகுதியை பாஜக கேட்டுப்பெற வாய்ப்புள்ளது. கடந்த முறை விழுப்புரம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால், பாமக வேட்பாளரான வடிவேல் இராவணன் தோல்வியடைந்தார். இந்த தொகுதியை பாஜகவுக்கு பாமக விட்டுக் கொடுக்குமா என்பது தெரியவில்லை. சிவகங்கை தொகுதியில் எப்போதுமே பாஜக போட்டியிடும். ஆனால், தேர்தல் அரசியலில் இருந்து ஹெச்.ராஜா விலகி விட்டதால் இந்த முறை பாஜகவின் லிஸ்ட்டில் அந்த தொகுதி இல்லையென தெரிகிறது. ஆனால், “தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனால், சிவகங்கை தொகுதியில் பாஜகதான் போட்டியிடும்” என்று ஏற்கனவே ஹெச்.ராஜா தெரிவித்துள்ளதால், அந்த தொகுதி குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.

ஆக மொத்தத்தில் பா.ஜ.க. கேட்கும் தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுப்பாரா? அல்லது வீம்பு பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal