இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை யாராவது மாற்றித் தருகிறேன் என்று சொன்னால் உஷாராக இருக்க வேண்டும். அதற்கு இந்தச் சம்பவம்தான் ஒரு உதாரணம்!
கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது44). இவர் தங்க நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். பிரகாசுக்கு வங்கி மேலாளர் ஒருவரின் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்பவர் அறிமும் ஆனார்.குட்டி தன்னை ரியல் எஸ்டேட் செய்து வருவதாக பிரகாஷிடம் அறிமுகப்படுத்தி கொண்டார். சம்பவத்தன்று பிரகாஷை குட்டி செல்போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது, தனக்கு தெரிந்த நபரிடம் ரூ.1 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளது.அதனை தங்க நகை விற்பனை தொழிலில் கைமாற்றி விட்டு விட்டு, உங்களுக்கான கமிஷனை எடுத்து கொண்டு, ரூ.85 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் திரும்ப தந்தால் போதும் என தெரிவித்தார். கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தாலும், அதை விட அதிக தொகைக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாகவும் கூறினார். இதற்கு பிரகாசும் மாற்றி தருவதாக ஒப்புக்கொண்டார். மேலும் பணத்தை பொள்ளாச்சியில் மாற்றிக்கொள்ளலாம் என திட்டமிட்டனர்.
அதன்படி சம்பவத்தன்று மாலை பிரகாஷ் தனது டிரைவர் மற்றும் வங்கி மேலாளருடன் தனது காரில் தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்த ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு பொள்ளாச்சிக்கு சென்றார். அங்கு குட்டி மற்றொரு காரில் வந்தார். அந்த காரில் அவருடன் பெண் உள்பட 2 பேர் இருந்தனர். காரை விட்டு இறங்கிய குட்டி, இவர்களிடம் தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளது. அவர்கள் அம்பாரம்பாளையத்தில் நிற்பார்கள். அங்கு சென்று மாற்றி கொள்ளலாம் என பிரகாஷிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றனர். அங்கு ஏற்கனவே காத்திருந்த 2 பேருடன் மேலும் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் 500 ரூபாய் நோட்டுகளை காட்டும்படி பிரகாஷிடம் குட்டி தெரிவித்தார். அவரும் பணத்தை காட்டினார்.
அப்போது திடீரென பணத்தை மாற்ற வந்த கும்பல், பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த டிரைவர் ஆகியோரை தாக்கி விட்டு அவரிடம் இருந்து ரூ.1ரு கோடி பணத்தை பறித்து விட்டு காரில் தப்பினர். இதுகுறித்து பிரகாஷ் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை வியாபாரியிடம் பணம் பறித்த கும்பல் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நகை வியாபாரியிடம் பணம் பறித்தது பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்ற சின்னகுட்டி (43) மற்றும் அவரது கூட்டாளிகளான திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த மீனா (38), தேனி பெரியகுளத்தை சேர்ந்த பாண்டியன் (52), தேவதாசன்பட்டி அழகர்சாமி (45), மதுரையை சேர்ந்த சவுமியன் (29), கவாஸ்கர் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் குட்டி இவர்களுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். இவர் தான், தங்க நகை வியாபாரியான பிரகாஷிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து அதனை பறிக்க திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி தாருங்கள் என கேட்டு, அவரிடம் உள்ள பணத்தை பறித்து விடலாம் என கூறியுள்ளார்.
இதற்கு அவர்களும் சம்மதித்தனர். அதன்படி பிரகாசை வரவழைத்து, பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியில் பதுங்கி இருந்த குட்டி, மீனா, பாண்டியன், அழகர்சாமி, சவுமியன், கவாஸ்கர் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தில் இவர்களை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.